கொரோனாவால் ஏழுமலையான் கோவில் அர்ச்சகருக்கு நேர்ந்த நிலைமை!!!

  • IndiaGlitz, [Friday,August 07 2020]

 

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 23 இரவு முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கில் பல விதிமுறைகள் தளர்த்தப்பட்டபோதும் கடந்த 82 நாட்களாக திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த ஜுன் 11 ஆம் தேதி முதல் குறைந்த அளவிலான தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்ட சில நாட்களிலேயே கோவிலிருந்த 13 அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தேவஸ்தான ஊழியர்கள், கோவில் பாதுகாப்பில் ஈடுபட்டு இருந்த பல காவலர்களுக்கும் கொரோனா இருப்பதாகக் கூறப்பட்டது. இதனால் தரிசன விதிமுறைகளில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. ரூ.300 செலுத்தி ஆன்லைனில் பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும் எனவும் விதிமுறைகள் வகுக்கப் பட்டன. இந்நிலையில் கோவிந்த பெருமாள் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றி வந்த ஒருவர் திருப்பதி ஏழுமலையான் கோவில் அர்ச்சகராக பணிமாற்றம் செய்யப்பட்டார் என்றும் அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் திருப்பதி தேவஸ்தான மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதுவரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பணியாற்றிய ஜுயர் உட்பட 20 அர்ச்சகர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு இருப்பதாகவும் அவர்களைத் தவிர தேவஸ்தானத்தில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் 200 பேருக்கு கொரோனா இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.