கொரோனாவால் பலியான இரண்டாவது இந்தியர்: அதிர்ச்சி தகவல்
- IndiaGlitz, [Saturday,March 14 2020]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக இந்த வைரஸ் பரவியது வருவது மட்டுமின்றி உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவில் சுமார் 80 பேர்கள் வரை கொரோனா வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படும் நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பெங்களூரை சேர்ந்த 76 வயது முகமது சித்திக் என்பவர் கொரோனா வைரஸால் உயிரிழந்தார் என்பது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்த இரண்டாவது நபர் குறித்த செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த 69 வயது பெண் ஒருவர் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. மறைந்த 69 வயது பெண்ணின் மகன் கடந்த மாதம் கொரோனா பாதிக்கப்பட்ட இத்தாலி மற்றும் ஸ்விட்சர்லாந்துக்கு சென்றுவிட்டு டெல்லி திரும்பியதாகவும், இதனையடுத்து அவருக்கும் அவருடைய தாயாருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி தாயார் மட்டும் மரணம் அடைந்தார்.
இருப்பினும் அந்த பெண்ணின் மகன் கொரோனாவில் இருந்து தற்போது மீண்டு வருவதாக டெல்லி மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. இந்தியாவில் கொரோனா வைரஸால் இரண்டு உயிர்கள் பலியாகியிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.