நடிகர் திலீப்புக்கு காவல் நீட்டிப்பு: ஜாமீன் கிடைக்க கடைசி வாய்ப்பு

  • IndiaGlitz, [Thursday,September 28 2017]

பிரபல மலையாள நடிகையை கடத்தி பாலியல் தொந்தரவு செய்வதற்கு மூளையாக செயல்பட்டதாக கூறி கைது செய்யப்பட்ட பிரபல மலையாள நடிகர் திலீப் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட நிலையில் அவருடைய காவல் வரும் அக்டோபர் 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக திலீப் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

மேலும் நடிகர் திலீப் மீண்டும் தாக்கல் செய்த ஜாமீன் மனு கேரள உயர்நீதிமன்றத்தில் வரும் அக்டோபர் 3ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. ஏற்கனவே கேரள உயர்நீதிமன்றம் திலீப்பின் ஜாமீன் மனுவை இரண்டு முறையும், அங்கமாலி நீதிமன்றம் இரண்டு முறையும் தள்ளுபடி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 10ஆம் தேதி சிறப்பு புலனாய்வுத்துறையினர் சார்ஷீட் தாக்கல் செய்யவுள்ளதால் அதற்கு முன்னர் ஜாமீன் பெறுவதற்கு கிடைத்துள்ள கடைசி சந்தர்ப்பமாக இது கருதப்படுகிறது.

இந்த நிலையில் திலீப் நடித்த பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'ராம்லீலா திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.