ஃபெப்சி வேலைநிறுத்தத்திற்கு காரணமான விளம்பரம்

  • IndiaGlitz, [Friday,September 01 2017]

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஃபெப்சி அமைப்பினர் வேலைநிறுத்தத்தை அறிவித்தபோது ரஜினிகாந்த் உள்பட பலரது முயற்சியால் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. ஆனால் திடீரென இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை மீண்டும் தொடங்குவதாக பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு முக்கிய காரணம் தயாரிப்பாளர்கள் சங்கம் கொடுத்திருந்த ஒரு விளம்பரம் தான். அந்த விளம்பரத்தின் சாரம்சம் இதுதான்:

'சென்னை தரமணி அரசு திரைப்பட கல்லூரியிலும், மற்றும் தமிழகம் முழுவதுமுள்ள அரசு சார்ந்த தனியார் கல்லூரியிலும், விஷூவல் கம்யூனிகேசன்ஸ் படித்தவர்களும், (எடிட்டிங், ஒளிப்பதிவு, மேக்கப், காஸ்டியூம், டிசைனர்) பயின்ற இளைஞர்களையும், ஏற்கனவே சினிமாத்துறையில் அனுபவம் வாய்ந்தவர்களையும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் பயன்படுத்தி கொள்ள தயாராக இருக்கிறது.

திரைத்துறையில் முன்னேற்றம் காணவேண்டும் என்று நினைக்கின்ற இளைஞர்களுக்கும், மற்றும் திரைத்துறை சார்ந்த பணிகளில் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு இது ஒரு அறிய வாய்ப்பு.

இந்த விளம்பர அறிவிப்புதான் பெப்சி அமைப்பினர்களை உடனே வேலைநிறுத்தம் செய்யும் அளவுக்கு தள்ளப்பட்டுள்ளது. ஃபெப்சி அமைப்புக்கு மாற்று அமைப்பை ஏற்படுத்த தயாரிப்பாளர் சங்கத்தினர் எடுக்கும் முயற்சி வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.