லோகேஷ் கனகராஜின் தரமான சம்பவங்களில் இதுவும் ஒன்று: ரா ஏஜண்ட் டீனாவாக நடித்தவர் இவரா?

  • IndiaGlitz, [Sunday,June 05 2022]

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நேற்று முன்தினம் வெளியான ’விக்ரம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த படத்தை பார்த்தவர்கள் ஒரு சில காட்சிகளில் எதிர்பாராத ஆச்சரியத்தை அடைந்திருப்பார்கள்.

குறிப்பாக கமல்ஹாசனின் மருமகளுக்கு துணையாக இருக்கும் வேலைக்கார பெண் காளியம்மாள் என்ற கேரக்டரில் நடித்தவர், திடீரென ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி காட்டுவார். ஒரு ஹீரோ லெவலுக்கு சண்டைக் காட்சியில் நடித்த அந்த பெண் ஹாலிவுட் அல்லது பாலிவுட் ஸ்டண்ட் நடிகையாக இருக்கும் என்று தான் பலரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் லோகேஷ் கனகராஜின் தரமான சம்பவம் இங்கேயேதான் தெரியவருகிறது. வசந்தி என்ற பெயரை கொண்ட அந்த பெண் அஜித் விஜய் படங்கள் உள்பட பல படங்களில் குருப் டான்சர்களில் ஒருவராக நடித்தவர் என்றும், ஆனால் அவருக்கு ஸ்டண்ட் ஆக்சன் காட்சிகளில் அனுபவம் உண்டு என்பதை லோகேஷ் கனகராஜ் தெரிந்து கொண்டு அவரைத் தேடிப்பிடித்து இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

ஏஜண்ட் டினா என்பதுதான் அவரது உண்மையான கேரக்டர் என்று தெரியவரும்போது திரையரங்குகளில் ஆச்சரியப்படாத ஒருவர்கூட இருக்க மாட்டார்கள் என்பதும் அவரது அந்த ஐந்து நிமிட ஸ்டண்ட் காட்சிகள் மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சந்தானபாரதி, இளங்கோ குமரவேல் ஆகியோர்களின் கேரக்டரிலும் திடீரென ஆச்சரியத்தை ஏற்படுத்தும் என்பதும் படம் பார்த்தவர்களுக்கு தெரிந்ததே. மொத்தத்தில் ‘விக்ரம்’ படத்தை இன்னும் ஒரு சில முறை பார்த்தாலும் ஒவ்வொரு முறை பார்க்கும்போது புதுமையாக தெரியும் அளவுக்கு இந்த படைப்பு உள்ளது என ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.