எட்டு மாணவிகளின் எதிர்காலத்தை காப்பாற்றிய காவல்துறை அதிகாரி
- IndiaGlitz, [Wednesday,February 28 2018]
தேர்வு எழுத பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த எட்டு மாணவிகளின் எதிர்காலத்தை காப்பாற்றிய ஐதராபாத் காவல்துறை அதிகாரி ஒருவருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இன்று காலை ஐதராபாத் அரசு பேருந்து ஒன்றில் எட்டு மாணவிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு இன்று அரசு பொதுத்தேர்வு என்பதால் சரியான நேரத்திற்கு தேர்வு அறைக்கு செல்ல வேண்டிய கட்டாய நிலை. இந்த நிலையில் மாணவிகள் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென பிரேக் டவுன் ஆகி நடுவழியில் நின்றுவிட்டது.
தேர்வு ஆரம்பிக்க இன்னும் சில நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில் அந்த எட்டு மாணவிகளும் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி இருந்தனர். அப்போது அந்த வழியாக காவல்துறை பேட்ரோல் வாகனம் ஒன்று வந்தது. அதில் இருந்த இன்ஸ்பெக்டர் ஸ்ரீனிவாசலு, மாணவிகளின் நிலைமையை புரிந்து கொண்டு உடனடியாக தன்னுடைய காவல்துறை வாகனத்தில் எட்டு மாணவிகளையும் ஏற்றிக்கொண்டு அவர்களை சரியான நேரத்திற்குள் கொண்டுபோய் சேர்த்தார்.
இன்ஸ்பெக்டர் ஸ்ரீனிவாசலு அவர்களின் உதவியால் எட்டு மாணவிகளும் இன்று சரியான நேரத்திற்கு வந்து தேர்வை எழுதினர். இதுகுறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களில் பரவியது. இன்ஸ்பெக்டர் ஸ்ரீனிவாசலு அவர்களுக்கு சமூக வலைத்தள பயனாளிகள் பாராட்டுக்களை குவித்து வருகின்றனர். எட்டு மாணவிகளின் எதிர்காலத்தை காப்பாற்றிய ரியல் ஹீரோ ஸ்ரீனிவாசலு அவர்களுக்கு நமது பாராட்டுக்கள்