புதிய உச்சத்தைத் தொட இருக்கும் தங்கத்தின் விலை!!! காரணம் என்ன???
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த ஆண்டை விட 2020 இல் தங்கத்தின் விலை 16 விழுக்காடு அதிகரித்து இருக்கிறது. இந்த விலையேற்றம் நின்றபாடும் இல்லை. படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா பாதிப்பினால் உலகமே ஸ்தம்பித்து இருந்தாலும் ஏன் தங்கத்தில் மட்டும் இப்படியொரு மாற்றம் என்ற கேள்வி தற்போது அனைவரையும் தொற்றிக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பொருளாதார வல்லுநர்கள் “இந்த விலையேற்றம் இதோடு நின்றுவிடாது. புதிய உச்சத்தைத் தொட இருக்கிறது” எனவும் பரபரப்பை கிளப்பி இருக்கின்றனர்.
கொரோனா ஊரடங்கு, கிட்டத்தட்ட 150 உலக நாடுகளில் கடும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நாடுகளில் தொழில் உற்பத்தி முற்றிலும் தடை பட்டு இருக்கிறது. தொழில் உற்பத்தி தடைப்பட்டதால் பங்கு சந்தைகள் அகல பாதாளத்திற்குத் தள்ளப்பட்டு இருக்கிறது. இந்நிலைமையில் முதலீட்டாளர்கள் அனைவரும் தங்கத்தில் முதலீடு செய்வதை பாதுகாப்பானதாக கருதுகின்றனர். அதனால் பங்குச் சந்தை முதலீடுகள் அனைத்தும் தங்கத்திற்கு மாறியிருக்கிறது. இந்நிலையில் ETF தங்கத்திற்கான முதலீடு உலகம் முழுவதும் புது உச்சத்தைத் தொட்டு இருக்கிறது.
பொதுவாக தங்கத்தின் விலையேற்றத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளுள் ஒன்றாக தேவை இருக்கும். தற்போது ஆபரணத் தங்கத்தை வாங்குவோரிடம் தேவை குறைவாகத்தான் இருக்கிறது. ஆனால் கொரோனா ஏற்படுத்தியிருக்கம் பொருளாதார நெருக்கடியில் முதலீட்டாளர்கள்தான் தங்கத்தின் தேவையை அதிகரித்து இருக்கிறார்கள். முதலீட்டாளர்கள் இடிஎஃப் தங்கத்தை வாங்கி குவிப்பதால் மீண்டும் தேவை அதிகரித்து விலையேற்றத்தில் கடும் மாற்றத்தை ஏற்படுகிறது. கடந்த ஜனவரி முதலே தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து இருக்கிறது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. முதலீட்டு தங்கத்தை விற்றுவரும் முக்கிய நிறுவனமான SPTR நிறுவனத்தில் மட்டும் 1,114 டன் தங்கம் கடந்த ஜனவரி மாதம் விற்று தீர்ந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதுமட்டுமல்லாமல் கச்சா எண்ணெயின் விலை சரிவும் இன்னொரு முக்கிய காரணமாக கருதப் படுகிறது. கச்சா எண்ணெய் விலைச் சரிவு உலக முதலீடுகளில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதால், பொருளாதாரம் ஸ்தம்பித்து இருக்கிறது. இந்நிலைமை எப்போது சரிசெய்யப்படும் என்ற கேள்வியும் தற்போது எழத்தொடங்கி இருக்கிறது. இப்படி வேலை வாய்ப்புகள் குறைவு, பொருளாதாரச் சரிவு, கச்சா எண்ணெய் விலை சரிவு போன்ற எல்லாக் காரணிகளும் சேர்ந்துகொண்டு தங்கத்தின் முதலீட்டை அதிகப்படுத்தி இருக்கிறது. இந்நிலைமையில் தங்கம் முதலீடு பொருளதார வீக்கத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
அதைத்தவிர, கொரோனா பரவல் தொடங்குவதற்கு முன்பே அமெரிக்கா மற்றும் சீனாவிடையே டிரேட் வார் நடைபெற்று வந்தது. இந்தக் காரணங்களும் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தை கடுமையாகப் பாதித்தன. தற்போது கொரோனா உற்பத்தியே இல்லாமல் பொருளாதாரத்தை முழுவதுமாக முடக்கியிருக்கிறது. இந்நிலைமையை சரிசெயவதற்காக உலக நாடுகள் அதிகபடியான பணப் புழக்கத்தை மக்களிடம் ஏற்படுத்துவதற்கு கடன் தொகை, நிவாரணத் தொகை எனப் பல திட்டங்களைத் தீட்டிவருகின்றனர். இப்படி இருப்பே இல்லாமல் அதாவது உற்பத்தியே இல்லாமல் பணத்தை மட்டும் அதிகமாக அச்சடித்து கொடுப்பதாலும் பணவீக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது. இந்த பணவீக்க காலத்தில் அதிகப் பணத்தைக் கொடுத்தால் மட்டுமே ஒரு பொருளை வாங்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படியொரு நெருக்கடி நிலைமையில் தங்கத்தில் முதலீடு அதிகரித்து இருக்கிறது.
கொரோனா காலத்தில் தங்கத்தின் உற்பத்தியும் மிகவும் குறைவாக இருக்கிறது. சுரங்கம் தோண்டும் பணி தடைப்பட்டு இருக்கிறது. அது மட்டுமட்டுமல்லாமல் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த ஜனவரியில் 71 ஆக இருந்தது. தற்போது 75 ஆக சரிந்து இருக்கிறது. மூன்றே மாதத்தில் 4 விழுக்காட்டு சரிவினை சந்தித்து இருக்கிறோம். இந்த சரிவினால் தங்கத்தை இறக்குமதி செய்யும்போது இந்தியா அதிக விலைக்கொடுத்தே தங்கத்தை வாங்க வேண்டியிருக்கும் இந்த காரணத்தாலும் தங்கத்தின் விலை அதிகரித்து காணப்படும். அதுமட்டுமல்லாது இறக்குமதி செய்யுபோது அதிக வரியையும் மத்திய அரசு விதித்து இருக்கிறது. இந்த வரி விகிதத்தாலும் தங்கத்தின் விலை அதிகரிக்கச் செய்யும். கொரோனா பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்து இருக்கிறது. இதனாலும் தங்கத்தின் முதலீடு ஒருபக்கம் அதிகரித்து வருகிறது.
இந்நிலைமையை சமாளிக்க கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும். அதற்கு ஊரடங்கு மட்டுமே இறுதியான முடிவாக இருக்காது. ஒருவேளை கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப் பட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுமானால் அடுத்து பொருளதார ஏற்றம் நிகழும். பொருளாதார ஏற்றம் ஏற்படும்போது தங்கத்திற்கான தேவை குறையும். கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப் படாமல் நிலைமை இப்படியே நீடித்தால் தங்கத்தின் விலை உச்சத்தைத் தொடும் என எதிர்ப்பாக்கப் படுகிறது. இப்போதைக்கு கொரோனாதான் தங்கத்தின் விலையைத் தீர்மானித்து வருகிறது. அதனால் விலை தங்கத்தின் விலை சரிவு என்ற மேஜிக்கும் கொரோனா கையில்தான் இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com