எகிரும் தங்கத்தின் விலை!!! இந்நேரத்தில் தங்கத்தின் முதலீடு நல்லதா???
- IndiaGlitz, [Tuesday,May 05 2020]
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இந்தியாவில் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நேரத்தில் தங்கத்தின் விலையும் வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்து இருக்கிறது. இந்த விலையேற்றத்திற்கு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைவு, தங்கத்தின் இறக்குமதி குறைவு, முதலீடுகளுக்கான ரெப்கோ வட்டி விகிதத்தை மத்திய அரசு குறைந்து இருப்பது, அதனால் தங்கத்தின் மூதலீடு அதிகரித்து இருப்பது எனப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை மட்டும் குறையவே இல்லை. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி அக்ஷயதிருதியை முன்னிட்டு இந்தியாவில் பலரும் ஆன்லைனில் தங்கத்தை வாங்கி குவித்து இருக்கின்றன.
தற்போது, கொரோனா பாதிப்பினால் உலகம் முழுவதும் கடும் பொருளாதார மந்தம் நிலவி வருகிறது. இந்நேரத்தில் பலரும் தங்கத்தில் முதலீட்டை போடுவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள். பங்குச்சந்தை, ஈக்விட்டி, மியூச்சுவல் ஃபண்டு போன்றவற்றில் பணத்தைப் போடும் முதலீட்டாளர்கள் தற்போது Gold ETF, பத்திரத்தங்கத்தின் பக்கம் தங்களது கவனத்தைத் திருப்பி இருக்கிறார்கள். முதலீட்டாளர்கள் மட்டுமல்லாது கடும் விலையேற்றத்திலும் சாமானிய மக்கள் தங்களது பணத்தைத் தங்கத்தில்தான் போடுகின்றனர்.
கொரோனா ஊரடங்கினால் நகைகடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கின்றன. எனவே ஆன்லைன் வர்த்தகம், பங்குச் சந்தை முதலீடு, இணையவழி தங்கம், பேப்பர் தங்கம் மற்றும் பத்திரத் தங்கம் என பல வழிமுறைகளில் தங்கம் ஆபரணமாகவும் வர்த்தக முதலீடுகளாகவும் வாங்கப்படுகின்றன. தங்கத்தின் முதலீட்டில் இந்தியா உலகளவில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இந்தியச் சந்தையில் தங்கம் ஆபரணமாகவும், முதலீடாகவும் அதிகளவில் விற்பனையாகிறது. எவ்வளவு விலை அதிகரிப்பு என்றாலும் சாமானிய மக்களின் முதலீட்டில் தங்கம்தான் முதல் இடத்தைப் பெறுகிறது.
ஒவ்வொர் ஆண்டும் இந்தியாவில் 800 டன் முதல் 900 டன் வரை ஆபரணத் தங்கம் விற்பனை செய்யப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் சுமார் 350 டன் வெறுமனே முதலீட்டு வடிவங்களில் விற்பனை ஆகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய அரசு இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவை கடந்த ஆண்டு முதல் 30% குறைத்து இருக்கிறது. இதனால் தேவையும் அதிகரித்து இருக்கிறது. அதோடு இந்தியாவில் உள்ள 10 விழுக்காடு சில்லறை முதலீட்டாளர்கள் தங்கத்தில்தான் முதலீடு செய்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொதுவாக டாலர் மதிப்பு அதிகரிக்கும்போது தங்கத்தின் மதிப்பு குறைந்து காணப்படும். மேலும், டாலர் மதிப்பு குறையும் போது தங்கத்தின் விலை அதிகரிக்கும். ஆனால் கொரோனா பரவல் நேரத்தில் நிலவுகின்ற பொருளாதார மந்த நிலையால் இரண்டின் மதிப்பும் அதிகரித்து இருக்கிறது. இந்நேரத்தில் தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பனதா என்ற சந்தேகமும் மக்களிடம் ஏற்பட்டு இருக்கிறது.
தங்கத்தின் மதிப்பு
தங்கத்தின் முதலீட்டுக்கும் அமெரிக்காவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஒட்டுமொத்த உலக நாடுகளில் உள்ள தங்கத்தின் இருப்பில் பாதியை அமெரிக்கா சொந்தமாக வைத்திருக்கிறது. அமெரிக்கா கடந்த 2008 இல் கடும்பொருளாதார மந்த நிலையைச் சந்தித்தது. அப்போது ஏற்பட்ட டாலரின் மதிப்பு குறைவால் தங்கத்தின் விலை அதிகரித்து காணப்பட்டது. அதற்குப் பின்னர் அமெரிக்க அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளினால் டாலர் மதிப்பு அதிகரிக்க தங்கத்தின் விலை குறைந்தது. இதே நிலைமை தற்போது கொரோனா விஷயத்திலும் நீடிக்கலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்துக் கூறுகின்றனர். அமெரிக்காவில் கொரோனா ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பினால் அந்நாட்டின் பொருளாதாரம் அகல பாதாளத்திற்குச் சென்றிருக்கிறது. எனவே டாலரின் மதிப்பு குறையலாம் எனப் பார்க்கப்பட்ட நிலையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்பைவிட எகிறியிருக்கிறது. இத்தகைய முரண்பட்ட நிலைமையால் தங்கத்தின் விலை குறைவதற்குப் பதிலாக அதிகரித்து காணப்படுகிறது. அதுமட்டுமல்லாது தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்யும்போது டாலரின் மதிப்பில்தான் வாங்கியாக வேண்டும். எனவே வாங்கப்படும் தங்கத்தின் மதிப்பு அதிகமாக இருப்பதால் இந்திய அரசாங்கம் தங்கத்திற்கு அதிகபடியான வரியை கட்டாயமாக்குகிறது. வாங்கப்படும் தங்கத்தின் அளவும் தற்போது இந்தியாவில் குறைந்து இருப்பதால் தேவையும் ஒருபக்கம் அதிகரித்து இருக்கிறது.
கடந்த 120 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிராம் தங்கத்தின் விலை 1 ரூபாயாக இருந்தது. ஆனால் இப்போது 1 ரூபாயை வைத்துக்கொண்டு ஒரு கிராம் தங்கத்தை வாங்க முடியாது. 1 கிராமுக்கு இன்றைய நிலவரப்படி 4362 ரூபாயை கொடுக்க வேண்டும். ஆக, நாளுக்கு நாள் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே இருக்க தங்கத்தின் மதிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதற்கு வேறு ஒரு காரணமும் இருக்கத்தான் செய்கிறது.
ஹெலிகாட்பர் மணி
பல நாடுகள் கொரோனா நேரத்தில் நிவாரண நிதியை மக்களுக்கு கொடுப்பதற்காக உள்நாட்டு உற்பத்தி இல்லாமலே ரூபாய் நோட்டை அச்சடித்து வழங்கி வருகின்றன. இப்படி வருமானம் இல்லாமல் கடன் பத்திரத்தை வங்கிகளிடம் வாங்கிக்கொண்டு நாடுகள் பணத்தை அச்சடிப்பதால் அந்த பணத்திற்கான மதிப்பு குறைந்து விடும். இந்நிலைமையை உலக நாடுகள் மிக விரைவாக சந்திக்க இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், ரூபாய் நோட்டை அச்சடிப்பது மாதிரி தங்கத்தை உற்பத்தி செய்ய முடியாது. அதன் அளவு குறைவு என்றாலும் தேவை அதிகம், எனவே தங்கத்திற்கு விலையும் அதிகமாக்கப்படுகிறது.
தங்கத்தில் முதலீடு
கொரோனா ஊரடங்கினால் அனைத்துத் தொழில் நிறுவனங்களும் முடக்கப்பட்டுள்ளது. எனவே பங்குச்சந்தை போன்ற எந்த வர்த்தமும் முதலீட்டாளருக்கு கைக்கொடுக்காது. மிகவும் பாதுகாப்பான முதலீடாக தற்போது தங்கம் மட்டுமே கருதப்படுகிறது. எனவே Paper Gold (ETF), Gold Bond போன்றவற்றில் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை போடுகின்றனர். கடந்த 2019 இல் மற்ற வர்த்தகத்தைவிட ETF வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் 18.4 விழுக்காடு லாபம் பார்த்திருக்கின்றனர். எனவே கொரேனாவிலும் வர்த்தகத்திற்கு தங்கம் மிகவும் ஏற்றதாக இருக்கும் என முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். ஆனால் இந்நிலைமை சாதாரண பாமரனுக்கு நல்லதா என்றால் அது கேள்விக்குறியாக மாறுகிறது. ஒரு முதலீட்டில் பணத்தை அதிகமாகப் போடும்போது விலையேற்றமும் அதிகமாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது. எனவே தங்கத்தின் முதலீடுகள் அதிகரிக்கும்போது தங்கத்தின விலையேற்றமும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
இப்படி ஏறிக்கொண்டே விலையேற்றத்தைப் பார்த்து நடுத்தர சமானிய மக்கள் உடனே தங்கத்தை வாங்கிவிடலாம் என நினைப்பது முற்றிலும் தவறு. கடந்த 2013 ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் ரூ. 35 ஆயிரத்தைத் தாண்டி சென்றபோது பலரும் இப்படித்தான் அவசரப்பட்டு தங்கத்தை வாங்கிக் குவித்தனர். கடும் விலையேற்றத்திற்கு பின்னர் பொருளாதார காரணிகளால் தங்கத்தின் விலை இறங்கவும் செய்தது. எனவே கொரோனா நேரத்தில் சாமானிய மக்கள் தங்கத்தை வாங்குவதில் அமைதி காக்கவேண்டும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். அதே நேரத்தில் சமானியன் தங்கம் வாங்கும்போது பத்திரத்தங்கம், பேப்பர் தங்கம் போன்றவற்றில் பணத்தை இறைக்க வேண்டாம் எனவும் வல்லுநர்கள் ஆலோசனை கூறுகின்றனர். காரணம் வர்த்தக நிலைமைக்கு Paper Gold (ETF), Gold Bond இது சரியாக இருக்கலாம். ஆனால் சமானியனுக்கு இது கைக்கொடுக்காது எனவும் தெரிவிக்கின்றனர்.
தங்கம் சமானியனைப் பொறுத்தவரையில் குறுகிய கால வருமானத்தைக் கொடுக்காது. அதன் மதிப்பு உயருவதற்கு நீண்ட காலம் தேவைப்படும். ஆனாலும் உடனடியான தேவைக்குத் தங்கம் மட்டுமே உரிய பாதுகாப்பை தரும். நடுத்தர மக்கள் தங்கத்தை சேமித்து வைப்பது நல்லதுதான். ஆனால் கொரோனா நேரத்தில் யோசிக்க வேண்டிய விஷயமாக மாறியிருக்கிறது. முதலீட்டாளருக்கு தங்கத்தின் முதலீடு மிகவும் பாதுகாப்பானதாக தற்போது கருதப்படுகிறது.