சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்ற அரசியல் வாரிசுகள்… விறுவிறுப்பான லிஸ்ட்!
- IndiaGlitz, [Thursday,May 06 2021]
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிப்பெற்று நாளை பதவியேற்க உள்ளது. இந்நிலையில் தமிழக அரசியல் களத்தில் ஏற்கனவே வெற்றிப்பெற்று ஜொலித்த சில அரசியல் வாரிசுகளும் இந்தத் தேர்தலில் நின்று வெற்றிப் பெற்றுள்ளனர். அவர்களைப் பற்றிய ஒரு சிறு பட்டியல்.
தற்போது நடைபெற்ற தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 92 ஆயிரம் வாக்குகளைப் பெற்று வெற்றிப்பெற்றுள்ளார். இவர் மு.கருணாநிதியின் பேரன் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகனும் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதோடு முதல் தேர்தலில் இவ்வளவு வாக்கு எண்ணிக்கையை பெற்றிருப்பது பெருமையாகப் பார்க்கப்படுகிறது.
திமுக அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர் தர்மலிங்கம். இவரின் பேரனும் மற்றும் திமுகவில் முக்கிய ஆளுமையாகக் கருதப்பட்ட அன்பில் பொய்யாமொழியின் மகனுமான அன்பில் மகேஷ் தற்போது நடைபெற்ற தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் நின்று வெற்றிப்பெற்றுள்ளார். இவர் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. காரணம் இவரது தந்தை பொய்யாமொழியின் இறப்புக்கு பிறகு கட்சியில் முழுநேரமும் செலவழித்தார் திரு. அன்பில் மகேஷ். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விருதுநகர் மாவட்ட செயலாளராக இருந்து மறைந்த தங்கப்பாண்டியனின் மகனான தங்கம் தென்னரசு இவர் முன்னாள் திமுக அமைச்சராகவும் இருந்துள்ளார். இவர் கடந்த 1998, 2016 ஆம் ஆண்டுகளில் அருப்புக்கோட்டை தொகுதியிலும் கடந்த 2011, 2016 இல் திருச்சுழியிலும் நின்று வெற்றிப் பெற்றுள்ளார். தற்போது 2021 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் திருச்சுழி தொகுதியில் வெற்றிப் பெற்றுள்ளார்.
திமுகவில் உள்ள மூத்த அரசியல் தலைவர் டி.ஆர்பாலுவின் மகன் டி.ஆர்.பி. ராஜா தற்போது நடைபெற்ற தேர்தலில் மன்னார்குடியில் நின்று வெற்றிப்பெற்றுள்ளார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் மன்னார்குடி தொகுதியில் நின்று வெற்றிப் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜனின் மகன்- பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தற்போது நடைபெற்ற தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் நின்று வெற்றிப்பெற்றுள்ளார். இவரின் தாத்தா பொ.தி.இராசனும் தமிழகத்தின் ஒரு முக்கியமான அரசியல்வாதி இருந்துள்ளார். அதோடு இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இதே தொகுதியில் நின்று வெற்றிப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அண்ணாவின் அமைச்சரவையில் இடம்பெற்று இருந்த சி.வி.எம். அண்ணாமலையின் பேரனும் திமுகவின் தொடக்கக் கால இளைஞரணி நிர்வாகிகளில் ஒருவராகவும் இருந்த சிவிஎம் பொன்பொழியின் மகன்- சிவிஎம்பி எழிலரசன் தற்போது நடைபெற்ற தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் நின்று வெற்றிப்பெற்றுள்ளார்.
திமுகவின் பொதுச்செயலாளராக இருந்து மறைந்த மூத்த அரசியல் தலைவர் திரு க.அன்பழகனின் பேரன் வெற்றி அழகன் வில்லிவாக்கம் தொகுதியில் இருந்து வெற்றிப் பெற்றுள்ளார்.
முன்னாள் அமைச்சர் கேபிபி சாமியின் தம்பி கேபிபி சங்கரும் தற்போது நடைபெற்ற தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் நின்று வெற்றிப்பெற்றுள்ளார்.
தேர்தல் அறிவிப்பின்போது கொரோனா பாதிப்பினால் உயிரிழந்த எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் தம்பி ஜெ.கருணாநிதி தற்போது தியாகராய நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றுள்ளார்.
மேலும் காங்கிரஸை பொறுத்தவரை மாரடைப்பால் உயிரிழந்த எம்.பி வசந்தகுமாரின் மகன் திரு விஜய் வசந்தகுமார் தற்போது நடைபெற்ற நாடாளுமன்ற இடைத்தேர்தலில் நின்று வெற்றிப்பெற்றுள்ளார்.
அதேபோல காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா, ஈரோடு மேற்கு தொகுதியிலும் காங்கிரஸ் மூத்தத் தலைவர் திருநாவுக்கரசரின் மகன் எஸ்.டி.ராமச்சந்திரன் அறந்தாங்கி தொகுதியிலும் வெற்றிப்பெற்றுள்ளனர்.
ஜே.எம்.ஆருணின் மகன் ஜே.எம். ஹசன் மௌலானா வேளச்சேரி தொகுதியிலும் ஊர்வசி செல்வராஜின் மகன் ஊர்வசி அமிர்தராஜ் ஸ்ரீவைகுண்டம் தொகுதியிலும் வெற்றிப்பெற்றுள்ளனர்.
அதிமுகவில் முன்னாள் சபாநாயகராக இருந்த பி.எச்.பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன் ஆலங்குளம் தொகுதியில் நின்று வெற்றிப் பெற்றுள்ளார்.