வெப்பமயமாகும் பூமி. உணவைத் தேடி ஊருக்குள் வந்த பனிக்கரடிகள்.
- IndiaGlitz, [Friday,December 06 2019]
ரஷ்யாவின் வடக்கு பகுதியில் உள்ள கிராமத்திற்குள் 50க்கும் மேற்பட்ட பனிக்கரடிகள் நுழைந்துள்ளதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சுகோட்கா பிராந்தியத்தில் உள்ள ரிர்காப்பி கிராமத்தில் அனைத்து பொது நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.மேலும் பொது இடங்கள் குடியிருப்பு வாசிகளைக் கரடிகள் தாக்காமல் இருக்க தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.இதற்குப் பருவநிலை மாற்றம்தான் காரணம் என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். கடற்கரை பகுதியில் குறைந்த பனியே இருப்பதால் அவை கடலை விடுத்து உணவைத் தேடி கிராமத்திற்குள் வருகிறது என்கின்றனர் ஆர்வலர்கள்.
மேலும் சிலர், ரிர்காப்பி கிராமத்திற்கு பனிக்கரடிகள் வருவது தொடர்கதையான ஒன்று எனவே அங்குள்ள மக்கள் நிரந்தரமாக வெளியேற்றப்பட வேண்டும் என்கின்றனர்.அந்த கிராமத்துக்குள் சுமார் 56 கரடிகள் நுழைந்துள்ளன. பெரிய மற்றும் சிறிய கரடிகளும், பெண் கரடிகளும் அதன் குட்டிகளும் அதில் அடங்கும், என ரிர்காப்பியில் கரடிகள் பாதுகாப்பு திட்டத்தின் தலைவராக இருக்கும் டட்யானா மினென்கோ தெரிவித்துள்ளார்.பெரும்பாலான கரடிகள் மிகவும் ஒல்லியாகக் காணப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.ரிர்காப்பி என்னும் இடத்திலிருந்து சுமார் 2.2கிமீ தூரத்தில் உள்ள கேப் என்ற இடத்தில் கரடிகள் வசிக்கின்றன ஆனால் அந்த இடம் வழக்கத்தைக் காட்டிலும் அதிக வெப்பமாக இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
புவி வெப்பமயமாதல் எதிர்கால சந்ததியினருக்கும் மனிதர்களைத் தவிர்த்த பிற உயிரினங்களுக்கும் மிகப் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. இது பற்றி பல சூழ்நிலை ஆய்வாளர்கள் போராடி வந்தாலும் இன்னும் உலக அரசுகளின் கவனம் இதை நோக்கி திரும்பவில்லை என்பதே உண்மை.