கொரோனாவின் உச்சம்!!! ஸ்பெயினில் அனாதையாக இறந்துகிடந்த முதியவர்கள்!!!
- IndiaGlitz, [Wednesday,March 25 2020]
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ள ஸ்பெயின் நாட்டில் மனதை உருக்கும் சம்பவம் ஒன்று அரங்கேறியிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளிலேயே மோசமான விளைவுகளைச் சந்தித்துவரும் ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட்டில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் பலர் கொரோனா வைரஸ் தாக்கி படுக்கைகளில் இறந்து கிடந்தனர். அச்சம்பவத்தை அடுத்து பாதுகாப்புத் துறை தீவிரமான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
ஸ்பெயின் இராணுவ வீரர்கள் அந்நாட்டின் குடியிருப்பு பகுதிகளைக் கிருமிநாசிகளைக் கொண்டு சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அப்பணியில் ஈடுபட்டிருந்தபோது வீரர்கள், ஒரு விடுதியில் பலர் படுக்கைகளில் தனியாக இறந்துகிடப்பதைக் கண்டனர். உடனே அந்தச் சடலங்களை மீட்டு பத்திரமாக ஐஸ் மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.
விடுதிகளில் தங்கியிருந்தவர்கள் பணிகளில் இருந்து ஓய்வுபெற்றவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தை அடுத்து பாதுகாப்புத் துறை அமைச்சர் Margarita Robles நாட்டு மக்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். “இத்தகைய மனிதாபிமானமற்ற நடத்தைகளை பொறுத்துக்கொள்ள முடியாது, பொறுப்புகளைத் தட்டிக் கழிப்பவர் மீது வழக்குத் தொடுக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்று அதிவேகமாகப் பரவிவரும் மேட்ரிட்டில் தற்போது சடலங்களுக்கு சடங்கு செய்து அடக்கம் செய்யப்படும் பணிகள் தேங்கியுள்ளன. இந்நிலையில் விளையாட்டுக்கு பயன்படுத்தும் ஐஸ் மைதானத்தை, கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் உடல்களை வைப்பதற்கு தற்காலிகமாகப் பயன்படுத்தி வருகிறது. இத்தாலியை அடுத்து தற்போது ஸ்பெயினில் உயிரிழப்புகள் அதிகம் என்பதும் குறிப்பிடத் தக்கது.
ஸ்பெயினில் நேற்று ஒருநாள் மட்டும் சுமார் 514 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்நாட்டில், இதுவரை 42,058 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. 2991 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விடுதி காப்பாளர்கள் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதிசெய்தவுடன் அவர்களை அப்படியே விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். எனவே, முதியோர் இல்லங்கள்மீது அரசு அதிக கவனம் செலுத்தும் எனவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.