திடீரென பாதை மாறியது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: சென்னைக்கு ஆபத்தா?
- IndiaGlitz, [Wednesday,November 10 2021]
வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்னும் ஒரு சில மணி நேரங்களில் மாறவுள்ள நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் பாதையை மாற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தெற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என்பதும் இந்த தாழ்வு பகுதி மண்டலமாக மாறி நாளை காலை 11 மணி அளவில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து கடலூர் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்றும் கணிக்கப்பட்டு இருந்தது.
இதன் காரணமாக நாளை வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் மிக அதிக வேகத்தில் காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கே நகர்ந்துள்ளது என்பதும் இதன் காரணமாக மகாபலிபுரம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே சென்னை அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக சென்னை உள்பட சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் 30 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை கனமழை காரணமாக வெள்ளத்தினால் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை நோக்கி திரும்பி உள்ளதால் சென்னை மக்கள் பெரும் அச்சத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.