தமிழகத்தின் ஒரே ஒரு பச்சை மண்டலத்திலும் கொரோனா: அதிர்ச்சி தகவல்
- IndiaGlitz, [Saturday,May 02 2020]
நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு நாளையுடன் அதாவது மே 3ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் நேற்று திடீரென மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சிகப்பு, ஆரஞ்சு, மற்றும் பச்சை என மண்டலங்கள் பிரிக்கப்பட்டு பச்சை மண்டலத்தில் உள்ள மாவட்டங்களுக்கு மட்டும் ஒரு சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது என்பது தெரிந்ததே. அந்த வகையில் பச்சை மண்டலத்தில் உள்ள மாவட்டத்தில் மட்டும் மதுக் கடைகளைத் திறக்கலாம் என்றும் மத்திய அரசு அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் ஒரே பச்சை மாவட்டமாக கிருஷ்ணகிரி இருந்ததால் அந்த பகுதியில் மது கடைகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இந்த ஒரு மாவட்டத்தில் மட்டும் மதுக்கடைகளை திறந்தால் பக்கத்து மாவட்டத்தில் உள்ளவர்கள் மதுவை வாங்க வரும் வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் கொரோனா வைரஸ் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பரவும் வாய்ப்பு இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் தற்போது தமிழகத்தின் ஒரே பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் பரவி விட்டது. இங்கு முதல் கொரோனா பாதிப்பு அடைந்தவர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலத்தில் உள்ள புட்டபர்த்தி சாய்பாபா கோவிலுக்கு சென்று திரும்பிய ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவருடன் புட்டபர்த்தி சென்ற மூன்று பேரும் மற்றும் உறவினர்கள் 8 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது .