பிழைக்க விடமாட்டங்க போல… Huawei நிறுவனத்துக்கு வந்த அடுத்த சிக்கல்!!!

  • IndiaGlitz, [Wednesday,July 15 2020]

 

ஆப்பிள் நிறுவனத்தையே விஞ்சிய தொழில் நுட்ப சேவைகளை வழங்கிவரும் ஹீவாய் நிறுவனம் தற்போது அடுக்கடுக்கான சிக்கலைச் சந்தித்து வருகிறது. காரணம் உலக நாடுகள் சீனா மீது கொண்டுள்ள அழுத்தத்தை தற்போது அந்நாட்டின் பொருளாதாரத்தின் மீது காட்ட ஆரம்பித்து இருக்கின்றன. அதனால் சீன நிறுவனங்களுக்கு தொடர்ந்து பல நாடுகளில் கட்டுப்பாடுகளும் நெருக்குதலும் கொடுக்கப் படுகின்றன. இந்தியாவில் 59 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

அதைப்போல அமெரிக்கா சில மாதங்களுக்கு முன்பே சீனத் தயாரிப்பு நிறுவனமான ஹீவாய் நிறுவனத் தயாரிப்புகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது. அதில் சீனச் செயலிகள் அமெரிக்காவின் பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்கிறது. சீன தொலைத்தொடர்பு சாதனங்களை உற்பத்தி செய்து அதன் மூலம் மற்ற நாடுகளில் உளவு வேலையை பார்த்து வருகிறது என்றும் குற்றம் சாட்டினார் அதிபர் ட்ரம்ப். மேலும் சீன மென்பொருள் தயாரிப்புகளை பயன்படுத்தவும் அந்நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. இதற்கு அமெரிக்காவின் நட்பு நாடுகளும் கைக்கொடுக்க ஆரம்பித்தன.

இந்நிலையில் சீனாவிற்கும் உலக நாடுகளுக்கும் இடையே கடுமையான முரண்பாடுகள் வர ஆரம்பித்தன. கொரேனா வைரஸ் விவகாரத்தில் சிக்கல் தலைத்தூக்கவே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரேயடியாக ஹீவாய் நிறுவனத் தயாரிப்புகளுக்கு அமெரிக்காவில் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் இந்நிறுவனத்தின் 5 ஜி தொடர்பான ஆய்வுகளுக்கும் அமெரிக்காவில் தடை விதிக்கப் பட்டது. இதனால் ஹீவாய் நிறுவனம் கடுமையான பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடும் எனப் பல்வேறு தரப்புகளில் இருந்து கருத்துக் கூறப்பட்டன. இந்த விவகாரம் முற்றியிருந்த நேரத்தில் ஹீவாய் நிறுவனம் 30 க்கும் மேற்பட்ட நாடுகளில் 46 ஒப்பந்தங்களை மேற்கொண்டது. இதனால் அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பங்கம் வராது என நம்பப்பட்ட நிலையில் தற்போது பிரிட்டன் பிரதமர் போரிஜ் ஜான்சன் தன்னுடைய நாட்டில் ஹீவாய் நிறுவனத் தயாரிப்புகளுக்கு தடைவிதித்து உத்தரவிட்டு இருக்கிறார்.

இதன்படி ஹீவாய் நிறுவனத்தின் தயாரிப்பு பொருட்களை பிரிட்டனில் இறக்குமதி செய்தவற்கும் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. அமெரிக்காவை போல தற்போது பிரிட்டனும் நேரடியாக சீன நிறுவனங்கள் மீது தடை விதித்து இருப்பதை குறித்து தற்போது பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க மற்ற சீன செயலிகளை தடை செய்வதைக் குறித்தும் கருத்துத் தெரிவித்து இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் ஹீவாய் நிறுவனம் 5ஜி தொழில்நுட்ப சேவைகளுக்கான ஆய்வுகளை மேற்கொண்டு வந்ததில் இருந்தே அந்நிறுவனத்திற்கு பல்வேறு நெருக்குதல் கொடுக்கப் பட்டு வருவதாகவும் கருத்து வெளியாகி இருக்கிறது.