இனி கார்ஃபைடு கல் வேண்டாம்! பழங்கள் பழுக்கவைக்க வந்தது புது டெக்னிக்! வியாபாரிகள் மகிழ்ச்சி!
- IndiaGlitz, [Monday,May 06 2019]
பழ சந்தைகளில் உடனடியாக பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்ய கார்ஃபைட் கற்களை வியாபாரிகள் பயன்படுத்தி வந்தனர். இதனால் உடலுக்கு அதிக அளவு தீங்கு உள்ளது என்பதை அறிந்தும், ஒரு சிலர் தொடர்ந்து கார்ஃபைட் கல் வைத்து பழுக்கவைக்கப்படும் பழத்தை விற்பனை செய்து வந்தனர்.
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின், அறிவுறுத்தலை மீறி இப்படி விற்பனை செய்யும் பழங்களை, கண்டறிந்து அதிகாரிகள், ரசாயன கலவைகள் பயன்படுத்தி அழித்ததோடு, அபராதமும் விதித்து உரிய நடவடிக்கை எடுத்தனர்.
இருப்பினும் முழுமையாக கார்ஃபைட் கல் வைத்து பழுக்க வைக்கப்படும் பழக்கம் வியாபாரிகளிடமிருந்து செல்லவில்லை. இந்நிலையில் தற்போது இதற்கு மாற்று முறையாக எத்திலின் வாயு மூலம், பழங்களை பழுக்க வைக்கலாம் என்றும், இதனால் உடலுக்கு எந்த தீங்கும் வராது எனக் கூறி உணவு பாதுகாப்பு துறையினர் பழ வியாபாரிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
எத்திலின் வாயு மூலம் ஏற்கனவே,பெரிய பெரிய கிடங்குகளில் பழங்களை பழுக்க வைக்கும் முறை அமலில் உள்ளது. ஆனால் சிறிய வியாபாரிகளால் அதனை செய்ய முடிவதில்லை. இதனால் எத்திப்பான் வேதிப் பொருளை பயன்படுத்தி பழங்களை பழுக்க வைக்கலாம் என கூறி வருகின்றனர். எத்திப்பானை நேரடியாக பழங்கள் மீது உபயோக படுத்தாமல்... நீர் உள்ள பக்கெட்டுகளில் அடைத்து வைத்து, காற்று ஊடுருவும் சிறு பெட்டியில் பழங்களை அடுக்கி, வைப்பதன் மூலம் அந்த காற்று பட்டு இந்த பழங்கள் மெல்ல மெல்ல பழுக்க துவங்கும்.
இதற்கான உரிய பயிற்சிகளையும் அதிகாரிகள் பழ வியாபாரிகளுக்கு வழங்கி வருகின்றனர். வியாபாரிகளும் அதிகாரிகளின் இந்த புதிய முயற்சிக்கு ஒத்துழைப்பு கொடுக்கின்றனர். இதனால் சென்னை கோயம்பேடு பழ சந்தைகளில் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கும் பழக்கம் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர் அதிகாரிகள்.
மேலும் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்படும் பழங்கள் 24 நேரத்தில் பழுக்கும், என்றால் இந்த முறையில் 48 மணி நேரம் எடுக்கும் என தெரிவித்துள்ளனர். இப்படி பழுக்க வைக்கப்படும் பழங்களை பொதுமக்கள் எந்த அச்சமுமின்றி சாப்பிடலாம் என கூறுகிறார்கள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்.