ஜார்ஜ் ஃபிளாய்ட் கொலை: இனவெறிக்கு எதிரான பேரணியில் கலந்து கொண்ட கனட அதிபர்!!!
- IndiaGlitz, [Saturday,June 06 2020]
அமெரிக்காவில் கடந்த மே 25 ஆம் தேதி ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கறுப்பினத்தவர் காவல் துறையினரின் பிடியில் சிக்கி உயிரிழந்தார். காவல் துறையினரின் போக்கை கண்டித்து முதலில் தொடங்கப்பட்ட போராட்டம் அமெரிக்க அரசின் அணுகுமுறையால் இனவெறிக்கு எதிரான போராட்டமாக அணிவகுக்க ஆரம்பித்தது. அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் தற்போது போராட்டங்கள் வலுத்து வருகின்றன. சில இடங்களில் வன்முறைகள் நடத்தப் படுவதாகவும் அமெரிக்க அதிபர் குற்றம் சாட்டம் தொடங்கினார். ஆனால் அதிபரின் தவறான அணுகுமுறையால் இந்த போராட்டங்கள் வலுப்பெற்று விட்டதாகத் தற்போது விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உலகம் முழுவதும் உள்ள கறுப்பினத்தவர்கள் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்கெல், ஐ.நா சபை பொதுச் செயலாளர், போப், முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா முதற்கொண்டு உலகில் பல தலைவர்கள் இனவெறிக்கு எதிராக தற்போது குரல் கொடுத்து வருகின்றனர்.
நேற்று கனடாவின் தலைநகர் ஓட்டாவாவில் இனவெறிக்கு எதிரான கோஷங்களோடு சிலர் பேராட்டங்களில் ஈடுப்பட்டனர். இனவெறிக்கு எதிராக கனட அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து தெரிவித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதகாவும் பேசியிருந்தார். கொரோனா அச்சுறுத்தல் நிலவிவரும் சூழலில் போராட்டங்களைத் தவிர்க்குமாறு அந்நாட்டின் பொதுச் சுகாதார அதிகாரி தெரசா கேட்டுக் கொண்டார். ஆனாலும் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டு வந்தது. கனடாவின் டொரொண்டோ மாகாணத்திலும் தற்போது போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.
இந்நிலையில் தலைநர் ஓட்டாவாவில் நடைபெற்ற பேரணியில் கனட அதிபர் ஜஸ்டின் டூரூடோ எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரெனக் கலந்து கொண்டார். இதை பேரணியில் ஈடுபட்டு இருந்தவர்களே எதிர்ப்பார்கவில்லை எனவும் கூறப்படுகிறது. பேரணியில் கலந்து கொண்ட அதிபர் ஜார்ஜ் ஃபிளாய்ட்டின் கொலைக்கு கண்டனம் தெரிவித்து முழங்காழிட்டு 9 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினார். அவருடன் சோமாலியாவை பூர்வீகமாக கொண்ட ஒரு அமைச்சரும் இடம் பெற்றிருந்தார். உலகத் தலைவர்கள் இனவெறிக்கு எதிராக குரல் கொடுத்து வரும் நிலையில் ஒரு நாட்டின் அதிபர், அவரே வந்து முழங்காலிட்டு ஆதரவு தெரிவித்து இருப்பது இதுவே முதல் முறை. முன்னதாக முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ஜார்ஜ் ஃபிளாய்ட்டின் மரணத்தால் இனவெறிக்கு எதிரான செயல்பாடுகள் வெற்றிப் பெற்று வருவதாக தெரிவித்து இருந்தார். அந்த வகையில் கனட அதிபரின் செயலும் தற்போது மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது.