ரெம்டெசிவர் கிடைக்க காலில் விழுந்த தாய்...! உயிரை விட்ட மகன்...!
- IndiaGlitz, [Thursday,April 29 2021]
தன் மகன் உயிர்பிழைக்க வேண்டுமென மருத்துவ அதிகாரி காலில் விழுந்து அழுதுள்ளார் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர்.
இந்தியாவில் கொரோனா-வின் 2-ஆம் கட்ட அலை தீவிரமாய் தாக்கி வருகிறது. 12-க்கும் அதிகமான நாடுகள் இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டுவதாக அறிவித்துள்ளன. தற்போது இங்குள்ள பல மாநிலங்களிலும், ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதிகள் தட்டுப்பாடு, ரெம்டெசிவர் மருந்து தட்டுப்பாடு, கொரோனா தடுப்பூசி போன்றவை இல்லாமல் ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் இறந்து வருகின்றனர்.
நோய்டாவைச் சேர்ந்த ரிங்கிதேவி என்பவரின் 24 வயதுடைய மகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நாளுக்கு நாள் இவரின் உடல்நிலை மோசமடைந்ததால், மருத்துவமனை நிர்வாகம், ரெம்டெசிவர் மருந்தை ஏற்பாடு செய்யுமாறு அவரது தாயிடம் கூறியிருந்தது.
ரெம்டெசிவர் மருந்திற்காக அங்குமிங்கும் சிறிது நேரம் அலைந்திருக்கிறார் அவரின் தாய். பின்பு தலைமை மருத்துவ அதிகாரியின் அலுவலகத்தில் இம்மருந்து கிடைப்பதாக கூறியுள்ளனர். அங்கு சென்றும் மருந்திற்காக வெகுநேரம் காத்திருக்கிறார் ரிங்கிதேவி, ஆனால் மருந்து கிடைக்கவில்லை. இந்தநிலையில் அங்குவந்த தலைமை மருத்துவ அதிகாரி தீபக் ஓஹ்ரி அவர்களின் காலில் விழுந்து மருந்து வேண்டுமென கதறி அழுதுள்ளார். அவரிடம் இருந்து மருந்து சீட்டை பெற்ற அதிகாரி, அதைப்பார்த்துவிட்டு மருந்து தட்டுப்பாடாக உள்ளது எனக்கூறி அதை நிராகரித்துவிட்டார். ஆனால் தேவியைப் போலவே வேறுசிலரும் மருந்திற்காக கெஞ்சியபடி அங்கு நின்றிருந்தனர். ஆனால் அங்குள்ள யாருக்குமே மருந்து கிடைக்கவில்லை என்பதே உண்மை.
மாலை வரை மருந்து கிடைக்கும் எனக் காத்திருந்த ரிங்கிதேவிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மீண்டும் மருத்துவமனைக்கு தனது மகனை பார்க்க சென்றுள்ளார் தாய். ஆனால் ரெம்டெசிவர் மருந்து இல்லாததால் அவரது இளம்வயது மகன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். கொரோனாவின் கோரத்தாண்டவம் இப்படி இருக்கும் என்பது மக்கள் யாரும் எதிர்பார்த்திராத ஒன்றே, பலரும் உறவுகளை இழந்து வாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.