டீ குடிக்க போனேன்: கொரோனா வார்டில் மாயமானவரின் அதிர்ச்சி பதில்
- IndiaGlitz, [Thursday,May 07 2020]
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று காலை திடீரென மாயமானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அவர் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டபோது டீ குடிக்க கடைக்கு சென்றேன்’ என்று சர்வசாதாரணமாக பதில் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பள்ளிக்கரணையைச் சேர்ந்த 62 வயது முதியவர் ஒருவர் கடந்த 29-ம் தேதி கொரோனா பாதிப்பால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென கொரோனா வார்டில் இருந்து அந்த முதியவர் மாயமானார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவரை கண்டுபிடிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மாயமான முதியவர் சிலமணி நேரத்தில் அவராகவே கொரோனா வார்டுக்கு திரும்பி வந்தார். அப்போது அவரிடம் விசாரணை செய்தபோது ‘டீ குடிக்க போனதாகவும், டீக்கடை எதுவும் இல்லை என்பதால் திரும்பி வந்துவிட்டதாகவும் சர்வசாதாரணமாக கூறியது போலீசாரையும், மருத்துவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா குறித்த விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தி வரும் நிலையில் கொரோனா நோயாளி ஒருவர் சர்வசாதாரணமாக டீக்குடிக்க வெளியில் சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் போன்ற நபர்களால் தமிழகம் கொரோனாவுக்கு இன்னும் அதிக விலை கொடுக்கும் என அஞ்சப்படுகிறது