உங்களின் பிரவுசிங் ஹிஸ்டரியை விற்று பணம் பார்க்கும் ஆன்டி-வைரஸ் கம்பெனி..!

  • IndiaGlitz, [Saturday,February 01 2020]

இன்று, நமது கணினிகளில் இணையப் பாதுகாப்பிற்காகவும் வைரஸ் ஊடுருவலிலிருந்து தற்காத்துக்கொள்ளவும் ஆன்டி-வைரஸ் மென்பொருள்களைப் பயன்படுத்துவது இயல்பாகிவிட்டது. அப்படியான ஒரு பிரபலமான ஆன்டி-வைரஸ்தான், அவாஸ்ட் (Avast). ஆனால், பாதுகாப்பு வேண்டிப் பதிவிறக்கப்படும் இந்த மென்பொருளே நமது தகவல்களை வைத்து எப்படி வியாபாரம் பார்க்கிறது என்ற திடுக்கிடும் ரிப்போர்ட் ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது.

பிரபல டெக் & கேட்ஜெட்ஸ் ஊடகங்களான மதர்போர்டு மற்றும் PCmag இணைந்து நடத்திய விசாரணையில்தான் இந்த அதிரவைக்கும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆன்டி-வைரஸ் மூலம் பிரவுஸிங் ஹிஸ்டரி தொடங்கி, யூடியூபில் பார்க்கும் வீடியோக்கள், ஜி.பி.எஸ் பயன்படுத்திச் செல்லும் இடங்கள், தேடப்படும் ஆபாச இணையதளங்கள், அதில் பார்க்கப்படும் வீடியோக்கள், தேடலுக்காகப் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் வரை பயனர்களின் இணையப் பயன்பாட்டை மிகவும் துல்லியமாகச் சேகரித்த அவாஸ்ட், பின்பு அதைப் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு விற்று பணம் பார்க்கிறது. இதை நேரடியாகச் செய்யாமல், அதன் துணை நிறுவனமான ஜம்ப்ஷாட் (Jumpshot Inc) மூலம் செய்கிறது அவாஸ்ட். இந்தத் துணை நிறுவனத்திடமிருந்து கிடைக்கப்பெற்ற ஒப்பந்த ஆவணங்கள் மூலம்தான் நம் பிரவுஸிங் ஹிஸ்டரிக்குப் பின் எவ்வளவு பெரிய சந்தை இயங்கிக்கொண்டிருக்கிறது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


இந்த ஜம்ப்ஷாட் நிறுவனம், அவாஸ்ட் சேகரிக்கும் தகவல்களைத் தேவைக்கேற்ப பல்வேறு பேக்கேஜ்களாகப் பிரித்து விற்கிறது. கிடைக்கப்பெற்ற ஆவணங்களின்படி, இந்த நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாகக் கூகுள், மைக்ரோசாஃப்ட், பெப்சி, யெல்ப் போன்ற பெரும் நிறுவனங்களின் பெயர்கள் அடிபடுகின்றன.

இதில் 10 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்கள் தன்னிடம் இருப்பதாக விளம்பரம் செய்கிறது ஜம்ப்ஷாட். அவாஸ்ட், இந்தத் தகவல்களைப் பயனாளர்களின் விருப்பத்துடனே பெற்றுள்ளதாகத் தெரிவிக்கிறது. ஆனால், பயனாளர்கள் சிலரை விசாரித்தபோது, இப்படி தங்களது தகவல்கள் விற்கப்படுவது குறித்து தங்களுக்கு எதுவுமே தெரியாது என அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். நம்மில் பலரையும்போல 'Terms and conditions' தானே என அவர்கள் ஓகே கொடுத்திருக்க வேண்டும். அதைதான் பயனரின் ஒப்புதலாக எடுத்துக்கொள்கிறது அவாஸ்ட்.

நியூயார்க்கைச் சேர்ந்த மார்க்கெட்டிங் நிறுவனமான ஆம்னிகான் மீடியா குரூப்ஸ், $2,075,000 விலைக்கு சில தளங்களின் 2019-ன் 'All Clicks Feed'-ஐ வாங்கியிருக்கிறது. 20 தளங்களுக்கான 'Insight Feed' என்ற தகவலும் இதில் அடங்கும். இப்போதே அடுத்த இரண்டு வருடங்களுக்கான தொகையும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தகவல்களின் விலை 2020-ம் ஆண்டிற்கு 2,225,000 டாலராகவும் 2021-ம் ஆண்டிற்கு 2,275,000 டாலராகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விற்கப்பட்ட தகவல்களில், ஒருவரது பாலினம், வயது போன்ற அனைத்தும் இருக்கும்.

அவாஸ்ட், தனது பிரவுசர் எக்ஸ்டென்ஷன்கள் (browser extension) கொண்டு தகவல்கள் சேகரித்துவந்தது சமீபத்தில் தெரியவர, கடந்த அக்டோபர் மாதம் மோஸில்லா, ஒபேரா மற்றும் குரோம் போன்ற பிரபல பிரவுசர்கள் தங்கள் எக்ஸ்டென்ஷன் ஸ்டோரிலிருந்து அவாஸ்ட் பிரவுசர் எக்ஸ்டென்ஷன்களை நீக்கின. அப்படியும் தகவல்கள் விற்பனை செய்யப்படுகிறதே என்று பார்த்தால், அவாஸ்ட் ஆன்டி-வைரஸ் மென்பொருளே தகவல்களை சேகரித்துக்கொண்டுதான் இருக்கிறது என்பது தெரியவருகிறது.