சரிதா நாயரின் தண்டனை திடீர் நிறுத்தி வைப்பு!
- IndiaGlitz, [Thursday,October 31 2019]
பிரபல மலையாள நடிகையும் தொழிலதிபருமான சரிதா நாயருக்கு கோவை நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு இருந்த நிலையில் அந்த தண்டனையை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை சரிதா நாயர் கோவையில் ஒரு நிறுவனம் ஒன்றை நடத்தி அந்த நிறுவனத்தின் மூலம் காற்றாலை அமைத்துத் தரும் சேவையை செய்து வந்தார். இந்த நிலையில் காற்றாலை அமைத்துத் தர லட்சக்கணக்கில் பணம் பெற்று குறிப்பிட்ட நேரத்தில் அமைத்துத் தரவில்லை என்று அவர் மீது புகார் கூறப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற நிலையில் இன்று மதியம் இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்பட்டது. சரிதா நாயர் உள்பட மூவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதால் மூவருக்கும் மூன்று ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது காற்றாலை மோசடி வழக்கில் சரிதா நாயருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய நவம்பர் 14ஆம் தேதி வரை சரிதா நாயருக்கு கோவை நீதிமன்றம் அவகாசம் அளித்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.