ஐ.ஐ.டி கேரள மாணவி செல்போனில் இருந்த தகவல்கள் உண்மை. மரண வாக்குமூலமாக எடுத்துக்கொள்ளலாம், தடவியல் துறை தகவல்
- IndiaGlitz, [Wednesday,December 04 2019]
சென்னை ஐ.ஐ.டியில் பாத்திமா லத்தீப் என்னும் மாணவி எம்.ஏ முதலாமாண்டு படித்து வந்தார். இவர் கேரளா மாநிலம் கொல்லம் கிளிகொள்ளுர் கிராமத்தைச் சேர்ந்தவர்.கடந்த மாதம் 9ம் தேதி இவர் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தங்கள் மகளின் தற்கொலையில் மர்மம் இருப்பதாக மாணவியின் பெற்றோர் புகார் அளித்திருந்தனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் மாணவியின் செல்போனில் தனது தற்கொலைக்கு காரணம் ஐ.ஐ.டி பேராசிரியர்கள் சுதர்சன் பத்மநாபன்,ஹீமச்சந்திரன் ஹாரா,மிலன்ட் பிராமி போன்றோர் காரணம் என குறிப்பு எழுதி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த குறிப்பு உண்மைதானா இதை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாமா என்பதை கண்டுபிடித்துக் கூறுமாறு தடவியல் துறைக்கு மத்திய குற்றபிரிவு கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் 6 நாட்களாக நடந்த ஆய்வுக்கு பிறகு தடவியல் துறை தனது அறிக்கையை நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இந்த ஆய்வில் மாணவி, பேராசிரியர்கள் குறித்து பதிவு செய்து வைத்திருந்தது உண்மைதான் என நிரூபணமாகி உள்ளது. அதேநேரம் இதை தனியாக விசாரித்து வந்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் உறுதி படுத்தவில்லை.ஆனால் விசாரணையை பேராசிரியர்கள் பக்கம் திருப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.