நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த வீடு- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சோகம்!!!
- IndiaGlitz, [Saturday,September 05 2020]
சேலம் அடுத்த குரங்குசாவடியில் வீடு ஒன்று நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் ஒரேகுடும்பத்தைச் சார்ந்த 5 பேர் உயிரிழந்த கோரச் சம்பவம் நடைபெற்று இருக்கிறது. மரஅறுவை தொழில் செய்துவரும் பாலன் மற்றும் அவருடைய மனைவி அமுதா தம்பதியினருக்கு இரண்டு மகன்கள். அவர்களின் மூத்த மகன் அன்பழகன்-புஷ்பா தம்பதியினருக்கு ஜெய்குமார், சவுமிகா என்ற இரு குழந்தைகள். இளைமகன் கார்த்திக்குக்கு மகேஷ்வரி என்ற மனைவியும் சர்வேஷ், முகேஷ் என்ற மகன்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்திருக்கின்றனர்.
4 படுக்கை அறைகள் மற்றும் ஒரு பெரிய ஹால் கொண்ட அந்த வீட்டில் முதல் அறையில் கார்த்திக் குடும்பத்தினரும், இரண்டாவது அறையில் அன்பழகன் குடும்பத்தினரும் மூன்றாவது அறையில் பாலன் அவரது மனைவியும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட மின்கசிவால் தீப்பரவி பெரும் புகைமூட்டமே உருவாகியதாகி இருக்கிறது. அக்கம், பக்கத்தினர் புகை மூட்டம் ஏற்பட்டதைப் பார்த்து காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்து உள்ளனர். அடுத்த சில நிமிடங்களில் தீயணைப்பு துறையினரும் அங்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால் முதல் அறையில் இருந்த கார்த்தி மற்றும் அவரது மனைவி, குழந்தைகள் வெளியே வரமுயற்சித்து முடியாமல் உடல் கருகி இறந்ததாகக் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. அடுத்த அறையில் இருந்த அன்பழகன் மனைவி புஷ்பாவும் தீயில் மூச்சு விடமுடியாமல் இறந்து இருக்கிறார். இந்த விபத்தில் அன்பழகன் படுகாயங்களுடன் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பாலன்-அமுதா அவருடைய உறவினர் மல்லிகா, அன்பழகனின் குழந்தைகள் ஜெய்குமார், சவுமிகா ஆகியோர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பி இருக்கின்றர். ஆனால் இந்த கோர விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தச் சம்பவம் அப்பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணையில் ஹாலில் இருந்த டிவியை இரவில் அணைக்காமல் விட்டதால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது என்றும் முதலில் டிவி அதிக வெப்பத்துடன் மின்கசிவை ஏற்படுத்தி மேலும் அதனால் அறைகளில் இருந்த ஏசிக்களில் மின்கசிவை ஏற்படுத்தியதாகவும் காவல் துறையினர் தகவல் அளித்து உள்ளனர்.