கதையை விட ஹீரோ பெரிய ஆளாக இருக்க கூடாது: 'விஷமக்காரன்' இயக்குனர் பேச்சு!

  • IndiaGlitz, [Thursday,February 04 2021]

’கதையை விட ஹீரோ பெரிய ஆளாக இருக்கக் கூடாது’ என ’விஷமக்காரன்’ படத்தின் ஹீரோ மற்றும் இயக்குனர் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஹனி பிரேம் ஒர்க்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் ’விஷமக்காரன்’. இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பதோடு இந்த படத்தை இயக்கவும் செய்திருக்கிறார் விஜய் என்ற புதுமுகம். அதுமட்டுமின்றி இந்த படத்தின் பாடல்களையும் இவரே பாடியுள்ளார்.

இந்த படத்தில் அனிதா மற்றும் சைத்ரா ரெட்டி ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்து வருகின்றனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்த நிலையில் இந்த விழாவில் இயக்குனரும் ஹீரோவுமான விஜய் பேசியதாவது:

இந்தப்படத்தில் இயக்குநர், நடிகர், பாடகர் என மூன்று பொறுப்புகளை ஏற்றுள்ளேன். சினிமா எடுக்கிறோம் என முடிவு செய்ததுமே ஏதாவது புதிய விஷயத்தை மையமாக வைத்து கதையை உருவாக்க நினைத்தபோது தோன்றியதுதான் இந்த விஷமக்காரன் படத்தின் கதை. இதில் ஹீரோவாக நடிப்பது சாதாரணம் என நினைத்தேன்.. ஆனால் ஹீரோவை வைத்து தான் இந்தப்படத்தின் மொத்த கதையுமே நகர்கிறது. அப்போது தான் ஹீரோவாக நடிப்பதன் கஷ்டம் தெரிந்தது.

இங்கே சத்யம் தியேட்டரில் இந்த விழாவுக்காக வந்தபோது கூட, கார் பார்க்கிங்கில் ஹீரோ யார் என விசாரித்தார்கள். யாரோ புது ஹீரோ என சொன்னேன்.. உடனே காரை அப்படி ஓரமா கொண்டுபோய் பார்க் பண்ணுங்க என சொன்னார்கள். ஹீரோவாக இருந்தால் தான் தியேட்டர் பார்க்கிங்கிலேயே மரியாதை தருகிறார்கள். இங்கே கதைகூட முக்கியமில்லை.. ஹீரோதான் முக்கியம்.. ஆனால் என்னை பொறுத்தவரை கதையை விட ஹீரோ பெரிய ஆளாக இருக்க கூடாது என்றுதான் சொல்வேன்..

இந்தப்படத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாக, திரைப்பட நிர்வாகம் மற்றும் உருவாக்கம் தொடர்பான ‘ஹனிபிலிக்ஸ்’ என்கிற ஒரு சாப்ட்வேரை உருவாக்கினோம். ஒரு படம் துவங்குவதற்கு தேவையான பட்ஜெட், ஸ்க்ரிப்ட், கால்ஷீட், செலவுகள் என அனைத்தையும் இந்த சாப்ட்வேரே உருவாக்கி தந்தது. இந்த சாப்ட்வேர் வகுத்து கொடுத்த திட்டத்தின்படி, திட்டமிட்ட பட்ஜெட்டுக்குள், 13 கால்ஷீட்டுகளிலேயே மொத்தப்படத்தையும் முடித்துவிட்டோம். மேலும், இந்தப்படம் வெளியான பின்பு, மற்ற அனைவரும் இந்த சாப்ட்வேரை பயன்படுத்திக்கொள்ளும் விதமாக இலவசமாகவே வழங்க இருக்கிறோம்..

முதலில் ஓடிடி தளத்தில் வெளியிடலாம் என்கிற எண்ணத்தில் இந்தப்படத்தை உருவாக்கி வந்தோம்.. ஆனால் இந்தப்படத்தின் புதிய அனுபவம் ரசிகர்களுக்கு சென்றுசேர வேண்டும் என்பதற்காக தியேட்டர்களிலேயே ரிலீஸ் செய்ய இருக்கிறோம்