தமிழகத்திலும் ரூ.20 க்கு மூலிகை பெட்ரோல் விற்பனை… பரபரப்பு தகவல்!!!
- IndiaGlitz, [Friday,September 11 2020]
மதுரையைச் சார்ந்த ராமர் பிள்ளை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மூலிகை பொருட்களில் இருந்து பெட்ரோல் கண்டுபிடித்து இருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். முதலில் அவரது கண்டுபிடிப்பைப் பார்த்து வியந்த பலரும் அடுத்தடுத்து எதிர்மறையான விமர்சனங்களையே வைத்தனர். சென்னை ஐஐடி நிறுவனம் அவர் கண்டுபிடித்த மூலிகை பெட்ரோலில் வெள்ளையாக ஏதோ ஒன்று கலக்கினார் எனக் கூறியது. அதையடுத்து தேசிய புலனாய்வு அமைப்பு அவரது கண்டுபிடிப்பு போலியானது என நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தது.
இப்படியான பல நெருக்கடிக்களுக்கு மத்தியிலும் ராமர் பிள்ளை தொடர்ந்து தனது கண்டுபிடிப்புகளை செய்தியாளர்கள் முன்னிலையில் நிரூபித்துக் கொண்டே இருந்தார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி தனது 21 ஆண்டு போராட்டம் தற்போது வெற்றிப்பெற்று இருப்பதாகக் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார். மேலும் தனது மூலிகை பெட்ரோலை தயாரித்து விற்பனை செய்ய கேரள அரசாங்கம் அனுமதி அளித்து இருக்கிறது எனவும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.20 கிடைக்கும் எனவும் மகிழ்ச்சி பொங்க அறிவிப்பு வெளியிட்டார்.
கேரளாவின் டிகோ பயோ பீயூஸ் இண்டர்சீஸ் எனும் நிறுவனம் அரசு ஒப்புதல் பெற்று இதுவரை 77 இடங்களில் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்துடன் மூலிகை பெட்ரோலை உற்பத்தி செய்து விற்பனை செய்ய ராமர் பிள்ளை ஒப்பந்தம் போட்டிருப்பதாகக் கூறியுள்ளார். பெட்ரோல் தயாரிக்க தேவையான மூலிகையை விளைவிக்க கேரள அரசாங்கம் மூணாறு பகுதியில் 1200 ஏக்கர் நிலப்பரப்பை ஒதுக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் முதலில் தயாரிக்கப்படும் 10 லட்சம் லிட்டர் மூலிகை பெட்ரோல் ஒரு லிட்டர் 39 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். அடுத்த 10 லட்சம் லிட்டர் வரைக்கும் ரூ. 20 க்கு விற்பனை செய்யப்படும். இப்படியே ஒரு கோடியே லிட்டர் அளவைத் தொடும்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.10 என்ற அளவிற்கே விற்பனை செய்யப்படும். இதற்கான விதிமுறைகளை அந்நிறுவனம் ஏற்றுக்கொண்டு விட்டதாகவும் ராமர் பிள்ளை தெரிவித்து இருக்கிறார்.
1994 இல் முதன் முதலில் மூலிகை பெட்ரோல் குறித்த அறிவிப்பை வெளியிட்ட ராமர் பிள்ளை விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்த இடையான்குடி பகுதியைச் சேர்ந்தவர் எனபதும் குறிப்பிடத்தக்கது. தற்போது கேரள மாநிலத்தில் தனது மூலிகை பெட்ரோல் உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்கான வேலைகள் வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.
தமிழகத்திற்கும் தனது பயன்பட வேண்டும் என்ற நோக்கில் சென்னையிலும் மூலிகை பெட்ரோல் விற்பனை செய்யப்படும் என ராமர் பிள்ளை தெரிவித்து இருக்கிறார். படிப்படியாக மதுரை, சேலம் போன்ற பகுதிகளுக்கு கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். முதற்கட்டமாக தமிழகத்தில் மூலிகை பெட்ரோலை விற்பனை செய்ய ஜிஎஸ்டி அனுமதி பெறப்பட்டு இருக்கிறது என்றும் அவர் தகவல் தெரிவித்து இருக்கிறார்.