காதில் இருந்த கம்மலை விற்று மகளுக்காக ஸ்மார்ட் போன் வாங்கிய தேவதாசிப்பெண்!!!
- IndiaGlitz, [Thursday,August 06 2020]
ஆந்திராவில் குழந்தைகளின் படிப்புக்காக தாலியைவிற்று டிவி வாங்கிய பெண்மணியைப் போல தற்போது கர்நாடகாவிலும் மனதை உருக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பெலகாவியா மாவட்டம் கோகாக் அடுத்த அங்கலகி என்னும் கிராமத்தைச் சார்ந்த தேவதாசி பெண்ணான சரோஜினின் 16 வயது மகள் அரசு பள்ளியில் படித்து வருகிறார். கர்நாடக அரசு பள்ளிகளில் தற்போது ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. சரோஜினியின் குடும்பம் ஏழ்மையில் இருப்பதால் அவருடைய வீட்டில் டிவியோ அல்லது ஸ்மார்ட் போனோ இல்லை. அக்கம் பக்கம் வீட்டிற்கு சென்று படிக்கலாம் என்றாலும் தேவதாசி குடும்பத்தைச் சேர்ந்த பெண் என்பதால் இந்தக் குழந்தையை யாரும் ஏற்றுக் கொள்வதில்லை.
இந்நிலையில் சரோஜினி தனது காதில் இருந்து கம்மலை ரூ.11 ஆயிரத்திற்கு விற்று அதில் ரூ. 7 ஆயிரத்திற்கு ஸ்மார்ட் போனை வாங்கியிருக்கிறார். தற்போது தனது மகள் ஸ்மார்ட் போனில் ஆன்லைன் வகுப்புகளை கவனிக்கிறார் என்று பெருமையோடு கூறுகிறார் சரோஜினி. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியா முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது பாடங்களை ஆன்லைனில் நடத்த பள்ளிகள் திட்டமிட்டு இருக்கின்றன. இதனால் ஏழை மாணவர்களின் நிலைமை கேள்விக் குறியாகி இருக்கிறது. அதுவும் விளிம்பு நிலையில் இருக்கும் கிராமத்து குழந்தைகளின் நிலைமை என்னவாகுமோ என்பதும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.