கஜா புயலின்போது மூடப்பழக்கத்தால் பலியான சிறுமி

  • IndiaGlitz, [Monday,November 19 2018]

இயற்கை பேரழிவான கஜா புயலால் டெல்டா மாவட்டத்தில் பல உயிர்கள் பலியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் புயலால் மட்டுமின்றி மூடப்பழக்கத்தாலும் ஒரு பிஞ்சு உயிர் பலியாகி இருக்கும் செய்தி பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்டா பகுதியை சேர்ந்த ஏழாம் வகுப்பு படித்து வரும் ஒரு சிறுமி பூப்பெய்துள்ளார். முதல் தீட்டு என்பதால் அவரது குடும்பத்தினர் அந்த சிறுமிக்கு வீட்டின் பின்னால் ஒரு தனி குடிசை போட்டு அந்த சிறுமியை தங்க வைத்துள்ளனர். இரவு முழுவதும் கடுமையான சூறாவளி காற்று மற்றும் கனமழையில் அந்த குடிசை இடிந்து சிறுமியின் மேல் விழுந்துள்ளது. இதனால் பலத்த காயமடைந்த அந்த சிறுமி பலியாகியுள்ளார்.

காலையில் குடும்பத்தினர் சிறுமி மரணம் அடைந்திருப்பதை பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். வீடு முதல் விண்வெளி வரை நிர்வகித்து வரும் பெண்களை இன்னும் முதல் தீட்டு என்ற மூடநம்பிக்கையில் தனியாக அமரவைத்து அந்த பிஞ்சு உயிர் பலியாக அவரது குடும்பத்தினர்களே காரணமாகியுள்ளனர். ஆப்பிரிக்க பழங்குடியின மக்கள் கூட திருந்தி வரும் இன்றைய காலகட்டத்தில் நம்முடைய தேசத்திலும் மூட நம்பிக்கையால் ஒரு உயிர் பலியாகியுள்ளது பெரும் வருத்தத்தை தருகிறது.