கொரோனா பாதிப்பு நேரத்திலும் படப்பிடிப்பை தொடங்கிய முதல் டீம்
- IndiaGlitz, [Friday,May 01 2020]
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகில் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கடந்த இரண்டு மாதங்களாக உலகெங்கிலும் திரைப்பட படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிந்தாலும் எப்போது படப்பிடிப்பு தொடங்கும் என்பது குறித்த தகவல் இன்னும் திரையுலகினர்களுக்கே தெரியவில்லை.
இந்த நிலையில் ஐஸ்லாந்து என்ற தீவு நாடு தங்களது நாட்டில் படப்பிடிப்பை தொடங்க மே 4ஆம் தேதி முதல் அனுமதித்துள்ளது. இந்த நாட்டில் கொரோனாவுக்கு 1760 பேர்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் இவர்கள் அனைவரும் தற்போது குணமாகிவிட்டனர். இந்த நிலையில் ஐஸ்லாந்தில் விதிக்கப்பட்டிருந்த தடைகள் யாவும் மே 4 ஆம் தேதி முதல் நீக்க அரசு முடிவு செய்துள்ளதால் படப்பிடிப்பு தொடங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து 'கட்லா' என்ற நெட்பிளிக்ஸ் தொடரின் படப்பிடிப்பு அங்கு தொடங்கவுள்ளது. ஐஸ்லாந்தில் உள்ள உள்ள விக் (Vik) என்ற கிராமத்தில் இந்த வெப்சீரீஸ் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் விரைவில் வெளிநாட்டுக்குழுக்கள் படப்பிடிப்பில் இணையவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே டென்மார்க், ஸ்வீடன் ஆகிய நாடுகள் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்திருந்தபோதிலும் இன்னும் யாரும் அந்நாட்டில் படப்பிடிப்பை தொடங்கவில்லை என்பதால் ஊரடங்கிற்கு பின் படப்பிடிப்பை தொடங்கும் முதல் டீம், ‘கட்லா’ டீம் தான் என்பது குறிப்பிடத்தக்கது