ரூ.56 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி: எடியூரப்பா போட்ட முதல் உத்தரவு
- IndiaGlitz, [Thursday,May 17 2018]
கர்நாடக சட்டமன்ற தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க தேவையான மெஜாரிட்டி எம்.எல்.ஏக்கள் கிடைக்கவில்லை. இருப்பினும் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜகவை ஆட்சி அமைக்க வருமாறு கர்நாடக கவர்னர் அழைப்பு விடுத்ததின் பேரில் இன்று காலை பாஜக சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்ட எடியூரப்பா அம்மாநிலத்தின் 23வது முதல்வராக பதவியேற்று கொண்டார்.
இந்த நிலையில் முதலமைச்சர் ஆன பின்னர் தலைமைச்செயலகம் வந்த முதல்வர் எடியூரப்பா போட்ட முதல் கையெழுத்து என்னவெனில் கர்நாடகாவில் ரூ.56 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி என்பதுதான். இதன்படி ரூ.1 லட்சம் வரை கடன் வாங்கிய விவசாயிகளின் கடன்கள் முழுவதும் தள்ளுபடி ஆகின்றது. முதல்வரின் இந்த முதல் கையெழுத்துக்கு விவசாயிகளின் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
முதல்வர் எடியூரப்பாவின் பதவியேற்புக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் சட்டமன்றம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் நிலையில் முதல்வரின் இந்த திடீர் முதல் கையெழுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.