உலகின் முதல் புராண 3D படத்தை வெளியிடும் கலைப்புலி எஸ்.தாணு!
- IndiaGlitz, [Monday,July 29 2019]
'மை டியர் குட்டிசாத்தான்' திரைப்படம் தமிழில் முதல் 3டி தொழில்நுட்பத்தில் வெளிவந்த திரைப்படம் என்றாலும் இதுவரை தமிழ் உள்பட எந்த மொழியிலும் 3டி தொழில்நுட்பத்தில் புராண திரைப்படங்கள் வெளி வந்தது இல்லை. இந்த நிலையில் உலகின் முதல் 3டி தொழில்நுட்ப புராண திரைப்படமான 'குருஷேத்திரம்' திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தின் தமிழ் பதிப்பை கலைப்புலி எஸ் தாணு அவர்கள் வெளியீடுகிறார். வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ள இந்தப் படத்தில் கர்ணன் கேரக்டரில் ஆக்சன் கிங் அர்ஜுனும் திரெளபதி கேரக்டரில் சினேகாவும் நடித்துள்ளனர். மேலும் கன்னட நடிகர் தர்ஷன், துரியோதனன் கேரக்டரிலும், துரியோதனனின் மனைவி கேரக்டரில் மேக்னா ராஜூம், கிருஷ்ணர் கேரக்டரில் ரவிச்சந்திரனும், பீஷ்மா கேரக்டரில் அம்ப்ரீஷும் நடித்துள்ளனர்
நாகண்ணா என்பவர் இயக்கிய இந்தப் படத்திற்கு ஹரிகிருஷ்ணா இசையமைத்துள்ளார். ஜெயனன் வின்செண்ட் ஒளிப்பதிவில், ஹர்ஷா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் மிகப்பெரிய பொருட்செலவில் 3D தொழில்நுட்பத்தில் தயாராகி உள்ளது. ஐந்து மொழிகளில் சுமார் 3000 திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்தப் படம் புராண ரசிகர்களை திருப்தி செய்யும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது