புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளைப் பாதிக்காது… விளக்கம் அளிக்கும் தமிழக அரசு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேளாண் சட்டத்தில் புதிய திருத்தங்களை கொண்டு வந்தது. அதை எதிர்த்து பல எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தன. ஆனால் விவசாயிகளை பாதிக்கும் நோக்கத்தில் இந்தச் சட்டம் கொண்டு வரப்படவில்லை என மத்திய அரசு தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறது.
இந்நிலையில் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறுமாறு டெல்லியில் விவசாயிகள் கடந்த சில வாரங்களாக கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் புதிய வேளாண் சட்டத் திருத்தத்தைப் பற்றிய விளக்கத்தை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.
முன்னதாக 1. விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டம். 2. விவசாயிகள் விளைபொருட்கள் வாணிபம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம். 3. அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது.
இதில் நிறைவேற்றப்பட்ட விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த சட்டத்தை பொறுத்த வரை, தமிழகத்தில் கோகோ, கரும்பு, கோழிப் பண்ணை ஆகியவற்றில் நடைமுறையில் உள்ள பண்ணை ஒப்பந்த முறையை ஒழுங்குப்படுத்த இந்தச் சட்டம் வழிவகை செய்யும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது. மேலும் 2019 ஆம் ஆண்டு கொண்டு வந்த தமிழ்நாடு வேளாண்மை விளைபொருட்கள் மற்றும் கால்நடை ஒப்பந்தப் பண்ணை மற்றும் சேவைகள் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டத்தின் நோக்கங்களை உறுதிப்படுத்தும் விதமாகவும் இந்தச் சட்டம் அமைந்துள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
இதனால் விவசாயிகளை கட்டாயப்படுத்தும் அல்லது பாதிக்கும் ஷரத்துகள் ஏதும் இந்தச் சட்டத்தில் இல்லை எனவும் தமிழக அரசு தெளிவுபடுத்தி உள்ளது. வாணிகம் மற்றும் வர்த்தகச் சட்டத்தைப் பொறுத்தவரை, வேளாண் விளைபொருட்களை விவசாயிகள் trade area என அறிவிக்கப்பட்ட எந்த இடத்திலும் விற்பனை செய்ய இச்சட்டம் அனுமதிப்பதால் விவசாயிகள் தங்கள் பொருட்களை விற்பனை செய்வதற்கு சுதந்திரம் கிடைக்கிறது.
இச்சட்டங்களால் குறைந்தபட்ச ஆதார விலையில் நடைபெறும் நெல் கொள்முதல்கள் பாதிக்காது. தொடர்ந்து அவை முறையாக நடைபெறும். உழவர் சந்தை திட்டம் தொடர்ந்து செயல்படுத்துவதற்கு இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது. பொது விநியோக திட்டத்தின்கீழ் விநியோகம் செய்ய விவசாயிகளிடம் இருந்து குறைந்தபட்ச ஆதார விலையில் வேளாண் பொருட்கள் கொள்முதல் செய்வது தொடரும். மேலும் எதிர்பாராத திடீர் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்து உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout