'பொன்னியின் செல்வனை கடுமையாக விமர்சித்த பிரபல எழுத்தாளர்!
- IndiaGlitz, [Saturday,July 09 2022]
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியான நிலையில் இந்த டீசர் சமூக வலைத்தளத்தில் வைரலானது என்பது தெரிந்ததே.
பள்ளி மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை வாசிக்காத இலக்கிய வாசகர்கள் இருக்க முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை. புத்தகத் திருவிழாவுக்கு சென்றால் 'பொன்னியின் செல்வன்’ புத்தகத்தை தான் முதலில் வாங்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்படும். ‘கல்கி’யில் பலமுறை தொடராக வந்தபோது ஒவ்வொரு முறையும் கல்கியின் சர்குலேஷன் எகிரும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
’பொன்னின் செல்வன்’ சரித்திர நாவலை இதுவரை குறை சொல்லிய தமிழ் வாசகர்களை யாரும் பார்த்ததில்லை, ஏன் கேள்விப்பட்டது கூட இல்லை என்பத்தான் தமிழ் இலக்கிய வரலாறு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிரபல எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் தனது சமூக வலைத்தளத்தில் ’பொன்னியின் செல்வன்’ நாவலுக்கு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியிருப்பதாவது: பொன்னியின் செல்வன் புத்தகத்தின் மீதோ படத்தின் மீதோ எனக்கு எந்த தனிப்பட்ட எரிச்சலும் இல்லை. கடந்த அரை நூற்றாண்டிற்கும் மேலாக தமிழில் இந்தப் புத்தக்கம் பெற்ற கவனத்தை இதைவிட பலமடங்கு மேலான எந்த நூலும் பெற்றதில்லை.
இந்தப் புத்தகத்திற்கு எத்தனை நூறு பதிப்புகள். எதையுமே வாசித்தறியாத ஒருவர் வாங்கக்கூடிய இரண்டே நூல்கள் ஒன்று பொன்னியின் செல்வன். மற்றது லிப்கோ டிக்ஷனரி. அந்த நூல் அடைந்த தொடர்ச்சியான வெகுசன பிரபல்யம் என்பது ஒரு விபத்து.
பொன்னியின் செல்வன் போன்ற நூல்கள் தமிழ் பண்பாட்டு வெளியின் இடத்தை அடைத்துக்கொண்டிருக்கும் சுமை. இலக்கிய இயக்கத்தின் மீதான சாப நிழல். கற்பிதங்களில் இளைப்பாற விரும்புகிறவர்களுக்கான சாய்மானம். ஒரு இலக்கிய வாசகனுக்கும் இந்த பொன்னியின் செல்வன் களேபரங்களுக்கும் இடையே பொதுவில் எதுவுமில்லை என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் மனுஷ்யபுத்திரனின் இந்த விமர்சனத்திற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.