பிரபல பாடகியின் சுயசரிதைக்கு ரூ.112 கோடி: அப்படி என்ன எழுதப்போகிறார்?

  • IndiaGlitz, [Wednesday,April 06 2022]

பிரபல பாடகி எழுத உள்ள சுயசரிதையை 112 கோடி ரூபாய் கொடுத்து முன்னணி நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் செய்துள்ளதாக வெளிவந்துள்ள தகவலை அடுத்து அப்படி என்ன அவர் அந்த சுயசரிதையில் எழுதப் போகிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது .

பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் என்பதும் அவரது பாடல் கடந்த 90 களில் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது என்பதும் தெரிந்ததே. இவரது ஒவ்வொரு ஆல்பங்களும் முந்தைய ஆல்பத்தின் சாதனையை முறியடித்துள்ளன .

ஆனால் தனது இசை வாழ்வில் அவர் வளர்ந்து கொண்டே சென்றாலும் தனிப்பட்ட வாழ்வில் பல சோதனைகளை சந்தித்தார். குறிப்பாக அவரது குடும்பத்தினரே அவரை ஆக்கிரமித்து அவர் எந்தவித முடிவையும் சுயமாக எடுக்க முடியாத நிலைக்கு தள்ளினர்.

கடந்த 2008ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் அவரது தந்தை பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் பிரிட்னி ஸ்பியர்ஸ் ’நீதிமன்ற காப்பு’ என்ற கட்டுப்பாட்டுக்குள் வந்தார். நீதிமன்ற காப்பு என்பது ஒருவர் மனதளவில் சுயமாக முடிவு எடுக்க முடியாத நிலையில் இருப்பவர்களின் சொந்த வாழ்வு மற்றும் அவர்களின் சொத்துக்களை மேற்பார்வையிடும் முறை என்பதாகும்.

ஆனால் 13 வருடங்களுக்குப் பிறகு கடந்த ஆண்டு அவர் நீதிமன்ற காப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்த 13 வருடங்களில் தான் கடந்து வந்த வலிமிகுந்த வாழ்க்கையை சுயசரிதையாக எழுத இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பிரிட்னியின் சுயசரிதை நூலை ‘சைமன் அண்ட் ஷஸ்டர்’ என்ற நிறுவனம் உரிமையை அமெரிக்க மதிப்பில் 15 மில்லியன் டாலருக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 112 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் புத்தகம் விரைவில் வெளியாகும் என்றும் இந்த புத்தகம் அவரது இசை ஆல்பங்களை விட மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.