நொடிப்பொழுதில் தண்டவாளத்திலிருந்த குழந்தையை காப்பாற்றிய ஊழியர்....!குவியும் பாராட்டுக்கள்...!

  • IndiaGlitz, [Tuesday,April 20 2021]

மஹாராஷ்டிராவில் தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை, நொடிப்பொழுதில் ஓடிச்சென்று காப்பாற்றிய ஊழியரை, ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் பாராட்டியுள்ளார்.

கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் மஹாராஷ்டிராவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பேருந்து, ரயில் உள்ளிட்ட போக்குவரத்துக்களை அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே, மக்கள் பயன்படுத்தவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான ரயில் நிலையங்கள் காற்று வாங்கிக்கொண்டு காணப்படுகிறது.

இந்நிலையில் மும்பையில், வாங்கனி ரயில் நிலையத்தில், 2-ஆம் எண் நடைமேடையருகில் தாயும், மகனும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது ரயில் தண்டவாளத்தில் 6 வயது மகன் தவறி விழுந்துவிட்டார். அவரது தாய்க்கும் கண்களில் குறைபாடு உள்ளதால், மகனை கண்டறிந்து காப்பாற்றமுடியவில்லை. என்ன செய்வது என்று அறியாமல் அவரது தாய் தேடிக்கொண்டிருக்க, மின்னல் வேகத்தில் மயுர் ஷெல்கே  என்ற ரயில்வே ஊழியர் ஓடி வந்து காப்பாற்றினார். 

ரயிலும் வேகமாக வந்துகொண்டிருந்த சூழலில், அந்த சிறுவனுக்கும், ஊழியருக்கும் 60 மீ தொலைவு இருந்துள்ளது. ரயில் பாதையிலும், சாதாரண சாலையில் நடப்பது போல நடக்கமுடியாது. ஆனால் ரயில்வே ஊழியர் மயுர் ஷெல்கே சிறுவனை கண்டதும் சாதுர்யமாக ஓடி அச்சிறுவனை தூக்கி நடைமேடையில் விட்டவர், தானும் சட்டென்று ஏறி விட்டார். ஊழியர் நடைமேடை ஏறுவதற்கும், ரயில் வருவதற்கும் ஒருசில நொடிகளே இருந்தன. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, நாம் ஒவ்வொருவரும் எதோ ஒரு இடத்தில் இணைந்திருக்கிறோம், இந்த சம்பவம் நடந்து 20 நிமிடங்கள் எனக்கு என்ன நடந்தது என்றே புரியவில்லை, என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பெரிதும் வைரலாக, பலரும் அந்த இளைஞரை பாராட்டி வந்தனர்.

இதைத்தொடர்ந்து ரயில்வே அமைச்சர் பியூஸ் கோஷல் அந்த இளைஞரை செல்போனில் தொடர்புகொண்டு பேசி, பாராட்டுதல்களை தெரிவித்துள்ளார். மேலும் ரயில்வே ஊழியர்கள் அனைவரும் அவரை கைதட்டி வரவேற்று பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.