'ராட்சசி', 'அடுத்த சாட்டை' இரண்டும் ஒரே கதையா? இயக்குனர் விளக்கம்
- IndiaGlitz, [Sunday,June 16 2019]
ஜோதிகா நடித்த 'ராட்சசி' திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு அரசு பள்ளியில் நடக்கும் அராஜகங்கள், அதனை எதிர்த்து போராடும் ஒரு ஆசிரியை தான் 'ராட்சசி' படத்தின் கதை. தமிழ் சினிமாவில் பல பள்ளிக்கூட கதைகள் வெளிவந்திருந்தாலும் அவற்றில் 'சாட்டை' போன்ற ஒருசில திரைப்படங்களே மக்களின் மனதை கவர்ந்தது. அந்த வகையில் ஜோதிகாவின் 'ராட்சசி' படமும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் 'சாட்டை' படத்தை இயக்கிய இயக்குனர் எம்.அன்பழகன் தற்போது 'அடுத்த சாட்டை' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படமும் 'சாட்டை' படம் போன்றே மாணவர்களின் பிரச்சனையை மையமாக வைத்த ஒரு கதைதான். இந்த நிலையில் 'ராட்சசி' மற்றும் 'அடுத்த சாட்டை' ஆகிய இரு திரைப்படங்களும் ஒரே கதையம்சம் கொண்டதாக இருப்பதாக கூறப்படும் நிலையில் இதுகுறித்து இயக்குனர் எம்.அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் இதுகுறித்து கூறியபோது, 'அரசுப் பள்ளியை மையமாக வைத்து ஆயிரம் படம் எடுக்கலாம் என்றும், அந்த அளவுக்கு அரசு பள்ளிகளில் பிரச்னைகள் இருப்பதாகவும், நான் ’சாட்டை’ படத்தில் சொல்லாத வேறு சில விஷயங்களை வைத்து 'ராட்சசன்' படம் எடுத்திருக்கலாம் என்றும் ஆனால் 'சாட்டை 2' படம் வேறு மாதிரியான களம் என்றும் கூறினார்.
'சாட்டை' படத்தில் அரசுப் பள்ளியில் நடக்கிற பிரச்னைகளைச் சொன்ன மாதிரி, 'அடுத்த சாட்டை' படத்தில் தனியார் கல்லூரியில் நடக்கும் பல பிரச்னைகளைச் சொல்லியிருப்பதாகவும் இயக்குனர் அன்பழகன் தெரிவித்தார். குறிப்பாக 'மாணவர்கள் மாதிரி பாராளுமன்றம்’னு ஒரு விஷயம் நிறைய இடங்களில் இருப்பதாகவும், ஆனால், வெளியில பலருக்குத் தெரியாது என்றும் கூறிய இயக்குனர், கல்லூரிக்குள்ளேயே தேர்தல் வெச்சு பிரதமர், நிதி அமைச்சர், கல்வி அமைச்சர்னு துறைகள் பிரிச்சு, பாராளுமன்றம் மாதிரி மாணவர்கள் செயல்படுறதை 'அடுத்த சாட்டை' படத்தில் காட்டியிருப்பதாகவும் கூறினார்.
மேலும் 'சாட்டை' படத்தில் இருந்து மட்டுமின்றி சமுத்திரக்கனி நடித்த 'அப்பா' படத்தில் இருந்தும் இந்த படத்தை வேறுபடுத்தி காட்ட முயற்சித்துள்ளதாகவும் இயக்குனர் அன்பழகன் கூறியுள்ளார்.