சிறுமி ஹாசினி கொலை வழக்கு: தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை
- IndiaGlitz, [Monday,February 19 2018]
சென்னையை அடுத்த குன்றத்தூர் பகுதியிலுள்ள போரூர் பகுதியை சேர்ந்த சிறுமி ஹாசினி கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மென்பொறியாளர் தஷ்வந்த் என்பவர் கைது செய்யப்படு பின்னர் ஜாமீனில் விடுதலையானார். ஜாமீனில் விடுதலையாகிய தஷ்வந்த் தனது பெற்ற தாய் சரளாவை பணத்திற்காக கொலை செய்துவிட்டு தலைமறைவானார். இதனிடையே தனிப்படை அமைத்து தஷ்வந்த்தை மும்பையில் போலீசார் கைது செய்தனர்
இந்த நிலையில் சிறுமி ஹாசினி கொலை வழக்கின் விசாரணை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இருதரப்பு வாதங்களும் கடந்த 14ஆம் தேதி நிறைவு பெற்ற நிலையில், இன்று தீர்ப்பு அளிக்கப்படவுள்ளதாக நீதிபதி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சில மணி நேரங்களுக்கு முன் தஷ்வந்த் குற்றவாளி என உறுதிசெய்யப்பட்டதாக தீர்ப்பு அளிக்கப்பட்டது. ஆள்கடத்தல், பாலியல் கொடுமை, கொலை உள்ளிட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதாகவும் சில நிமிடங்களில் தண்டனை விபரங்கள் அறிவிக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து சற்றுமுன் வழங்கப்பட்ட தண்டனை தீர்ப்பில், ஆள்கடத்தல், பாலியல் வன்கொடுமை, மானபங்க குற்றம், தடயங்களை மறைக்க முயன்ற குற்றம் ஆகிய குற்றங்களுக்கு மொத்தம் 46 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், சிறுமி ஹாசினி வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட வழக்கில் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனையும் அறிவிக்கப்பட்டுள்ளது.