கொரோனா தனிமை: பிரத்யேக முறையில் அம்மா கோவிட்-19 திட்டத்தைத் துவக்கி வைத்த தமிழக முதல்வர்!!!
- IndiaGlitz, [Wednesday,August 05 2020]
தமிழகத்தில் கடந்த ஜுலை மாதத்தைவிட கொரோனாவில் இருந்து குணமடைவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது. இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய மருத்துவ மனையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்துள்ளார். மேலும் இந்தியாவிலேயே முதல் முறையாக கொரோனா அறிகுறிகளுடன் வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டு இருக்கும் நபர்களுக்கு பிரத்யேக முறையிலான புதிய திட்டம் ஒன்றையும் தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்துள்ளார். அம்மா கோவிட்-19 வீட்டுப் பராமரிப்பு திட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம் கொரோனா அறிகுறிகளுடன் வீட்டுத்தனிமையில் உள்ளவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இதனால் வீட்டுத் தனிமையில் உள்ளவர்களை கண்காணிக்க மருத்துவர்கள், செவிலியர்கள், மனநல ஆலோசகர்கள் உட்பட 20 பேர் கொண்ட மருத்துவக் குழு சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளதாகவும், 14 நாட்கள் தனிமையில் இருப்பவர்களுக்குத் தேவையான முழு மருத்துவ உதவிகளும் இணைய வழியில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் வீட்டு தனிமையில் உள்ளவர்களுக்கு அவசர உதவி தேவைப்பட்டால் உடனடியாக மருத்துவ மனைகளுக்கு அழைத்துச் செல்ல அவசர ஊர்திகளும் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.