தூற்றலே போற்றலுக்கு வழிவகுக்கிறது… விமர்சனங்களுக்கு கடும் பதிலடி கொடுத்த தமிழக முதல்வர்!!!

கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு மெத்தனமாகச் செயல்படுகிறது என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில் விமர்சனங்களே எங்களது பெருமையை எடுத்துச் சொல்ல வழிவகுத்து கொடுத்து இருக்கிறது எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் தமிழக அரசு இந்திய அளவில் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது எனத் தமிழக அரசு சார்பில் தகவல் கூறப்பட்டு இருந்தது.

ஆனால் இதுகுறித்து விமர்சித்த எதிர்க்கட்சியினர் ஆரம்பத்தில் தமிழகத்தில் முதலீடுகளே இல்லை எனச் செய்தியாளர்கள் மத்தியில் பேட்டி அளித்து கடும் பரபரப்பை ஏற்படுத்தினர். அதைத்தொடர்ந்து தமிழகத்திற்குத் தற்போது கிடைத்துள்ள முதலீடுகள் வழக்கமானதுதான் என்றும் கூறத் தொடங்கினர். அடுத்து எப்போதும் இருக்கும் முதலீட்டு அளவில் 25% முதலீட்டை மட்டுமே தமிழகம் பெற்றிருப்பதாகவும் விமர்சனம் எழுந்தது.

இத்தகைய விமர்சனங்களுக்குப் பதில் கூறிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி “எவ்வளவு நாளைக்குத்தான் ஸ்டாலின் ஒன்றும் அறியாதவர் போல சொல்லிக் கொண்டிருக்க முடியும். எல்லாம் மக்கள் மன்றத்தில் தெளிவாக உள்ளன. ஸ்டாலின் இதுபோன்று குற்றச்சாட்டுகளை வைப்பதால் நாங்கள் எங்களுடைய சாதனைகளை கூற அவர் வழிவகை செய்து கொடுக்கிறார்” எனப் பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்குவதற்காக ஸ்ரீபெரும்புதூரில் வல்லம் வடகால் தொழில் பூங்காவில் 7 ஆயிரம் பேர் தங்குவதற்காக ரூபாய் 377 கோடி செலவில் 9.50 ஏக்கர் நிலப்பரப்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படும் எனவும் முதல்வர் தெரிவித்தார். அடுத்த கட்டமாக 32 ஏக்கர் நிலப்பரப்பில் ரூபாய் 700 கோடி செலவில் 20 ஆயிரம் பேர் தங்குவதற்கான குடியிருப்பு கட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மீண்டும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு எப்போது நடத்தப்படும் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியதும் நடத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.