கட்சிக்குள் நிலவும் பனிப்போரை விலக்கி… விடிவெள்ளியாக வளர்ந்து நிற்கும் தமிழக முதல்வர்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
அதிமுக கட்சியில் கடும் பனிப்போர் நிலவி வருவதாகக் கூறப்படும் நிலையில் தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அதிகரித்து இருப்பதாகக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. மேலும் தற்போதுள்ள கள நிலவரங்களும் கட்சித் தொண்டர்களின் ஆதரவும் அதைவிட டெல்லியின் கரிசனப் பார்வையும் எடப்பாடி பழனிசாமிக்கு அதிகரித்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் புகழுக்கு சரிவை ஏற்படுத்திய ஓபிஎஸ் அவர்களுக்கு கட்சி மட்டத்தில் இருந்த ஆதரவு குறைந்து வருவதாகக் கருத்து நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கடும் சரிவுக்கு காரணம் ஓபிஎஸ் அவரது குடும்பத்தைப் பற்றியே அதிக கவனம் செலுத்தி வந்ததாகவும் இது அவரை நம்பி இருந்தவர்களுக்கு அதிக அவநம்பிக்கையை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து மேலும், “பன்னீர் செல்வத்தின் மீது பரவலாக நம்பிக்கை குறைவு ஏற்பட்டிருக்கிறது. அதிமுகவை உடைத்துக் கொண்டு தனியாக செயல்பட்டபோது அவரோடு அணி திரண்டவர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. இதற்காக ஓபிஎஸ் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதேநேரம் தனது மகன் ரவீந்திரநாத்தை எம்.பி ஆக்கிட்டாரு. தம்பி ராஜா ஆவின் சேர்மன் ஆக இருக்கிறார். சம்மந்தி அட்வகேட் ஜெனரல். இதெல்லாம் போதாது என்று, வரும் சட்டமன்றத் தேர்தலில் இளைய மகன் பிரதீப்பை எம்.எல்.ஏ ஆக்க திட்டமிட்டிருக்கிறார்” இவ்வாறு கட்சி மட்டத்தில் கருத்துக் கணிப்புகள் நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அவரைக் குறித்து "குடும்பத்திற்காக மல்லு கட்டுகிறவர், கட்சி வேலைகளில் கொஞ்சமும் அக்கறை காட்டவில்லை. 22 தொகுதி இடைத்தேர்தலில் தனது சொந்த மாவட்டமும் அதிமுக கோட்டையுமான தேனியில் உள்ள ஆண்டிப்பட்டி பெரியகுளம் தொகுதிகளில் ஓபிஎஸ் ஆட்கள் வேலையே பார்க்கவில்லை. இதனால் இரண்டு தொகுதிகளிலும் கட்சி தோற்றது. இதில் பெரியகுளம் தொகுதிக்கு பன்னிர் சிபாரிசு செய்த வேட்பாளர் களத்திற்கே வரவில்லை. இது கட்சிக்கு மிகப்பெரிய அவமானமாக அமைந்தது என்று கட்சியினர் மத்தியில் சலசலப்பு இருந்தது. ஆனால் ஓபிஎஸ் தரப்பு இதுபற்றி கொஞ்சமும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. உள்ளாட்சி தேர்தலிலும் தேனி மாவட்டத்தில் ஏறத்தாழ இதே நிலைதான்.
ஓபிஎஸ் சமூகமான தேவர் சமூகத்தில் கூட அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான ஆதரவு எதுவும் இல்லை. தர்மயுத்தம் காலத்தில் அவருடன் தேவர் சமூகத்தை சேர்ந்த ஒரு எம்எல்ஏ கூட இருந்ததில்லை” என்றும் கருத்துக் கூறப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவித்து உள்ளன.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடிக்கு தமிழக மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் செல்வாக்கை டெல்லி கவனித்து வருகிறது என்றும் முக்கிய பிரச்சனைகளில் தங்களுடன் அவர் இணக்கம் காட்டி வருவதையும் அவர்கள் மறக்கவில்லை என்றும் கருத்து நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் கட்சிக்குள் நிலவும் பனிப்போரில் இபிஎஸ்ஸின் கையே மேலோங்கி இருப்பதாகவும் அவரின் செல்வாக்கு அதிகரித்து வருவதாகவும் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments