மக்களால் நேரடியாக முதல்வர் ஆனேன்… எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை!
- IndiaGlitz, [Wednesday,January 20 2021]
வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, அவர் எதிர்க் கட்சிகளை கடுமையாக விமர்சித்து உள்ளார். மேலும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு பொய் பேசும் பிரிவில் நோபல் பரிசுதான் கொடுக்க வேண்டும் என்றும் காட்டமாகக் கருத்துக் கூறி இருக்கிறார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே முதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்கு கூடி இருந்த திரளான மக்கள் மத்தியில் தேர்தல் பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், நான் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் இல்லை என ஸ்டாலின் கூறி வருகிறார். நான் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப் பட்டவன்தானே? என ஸ்டாலினுக்கு அவர் தக்கப் பதிலடி கொடுத்தார்.
மேலும் பேசிய அவர், மக்களின் குறைகளைக் கேட்கும் ஸ்டாலின் ஆட்சியில் இருந்தபோது ஏன் எதுவும் செய்யவில்லை? எனவும் கேள்வி எழுப்பினார். பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என்றால் அதை ஸ்டாலினுக்குத்தான் கொடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து உள்ளார்.
முதல்வர் பரப்புரையில் ஈடுபடுவதற்கு முன்பு, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராமானுஜர் கோவிலில் தரிசனம் செய்தார். பின்னர் கோவில் யானைக்கு வாழைப்பழம், தர்பூசணியை வழங்கினார். அப்போது கோவில் சார்பாக முதல்வருக்கு ராமானுஜர் பட்டம் வழங்கப்பட்டது. இத்தருணத்தில் முதல்வருடன் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.