பொது முடக்கம் குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட மத்திய அரசு...!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் பொது முடக்கத்தை அமல்படுத்தினால், என்னென்ன நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் வேகமாக பரவி வருவதால், பல மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் மூச்சுத்திணறல் பிரச்சனையால் ஏராளமான மக்கள் உயிரிழந்து வரும் செய்தி, நெஞ்சை பதைபதைக்க செய்கின்றது. இதனால் மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்த, என்னென்ன கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றவேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையை மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ளார்.
அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,
• "மாநிலங்களில் குறிப்பிட்ட பகுதியில் கொரோனா பாதிப்பு 10% தாண்டினாலோ, படுக்கை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் தேவைகள் 60% நிரம்பினாலோ அங்கு ஊரடங்கை அமல்படுத்தலாம்.
• கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவருடன் இருந்தவர்கள் பொதுஇடங்களுக்கு செல்லாமல், தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தொற்று அதிகம் பரவியுள்ள பகுதிகளை, கட்டுப்பாட்டு பகுதிகளாக மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும்.
• அரசியல், விளையாட்டு, கேளிக்கை நிகழ்வுகள், கல்வி, கலாச்சாரம், ஆன்மிக திருவிழாக்கள், சமூக கூட்டங்கள் போன்றவற்றிற்கு அனுமதி வழங்கக் கூடாது. துக்க நிகழ்வுகளுக்கு 20 பேரும், திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.
• மாநிலங்களில் உள்ள மால்கள், திரையரங்குகள், உணவகங்கள், மதுபான பார்கள், விளையாட்டு மைதானங்கள், உடற்பயிற்சி கூடங்கள், அழகு நிலையங்கள், நீச்சல் குளங்கள், ஆன்மிக ஸ்தலங்கள் உள்ளிட்டவற்றை இயங்க தடைவிதிக்கலாம்.
• மக்களுக்கு தேவையான சுகாதார சேவைகள், காவல் துறையினர், தீயணைப்பு துறை, வங்கி, மின்சாரம், குடிநீர், தூய்மை பணி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் நடக்க, எந்த வித தடையும் இருக்கக் கூடாது. மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கை கட்டாயமாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கலாம்.
• ரயில், மெட்ரோ ரயில், பேருந்து, வாடகை கார்கள் உள்ளிட்ட போக்குவரத்துக்களில், 50% மட்டுமே பயனாளிகள் அனுமதிக்கப்படுவார்கள். தனியார் மற்றும் அரசு அலுவலகங்களும் 50% பணியாளர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும்.
• மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையில் உள்ள சரக்கு போக்குவரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது. யூனியன் பிரதேசங்கள் உள்ளூர் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ளலாம். கொரோனா அதிகமுள்ள பகுதிகளில் 14 நாட்கள் வரை ஊரடங்கை அமல்படுத்தலாம்.
• உள்ளாட்சி அமைப்புகள் எந்தெந்த பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிவிக்க வேண்டும். கட்டுப்பாட்டு பகுதிகளில் பணியாற்றுவதற்கு ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் மற்றும் ராணுவ வீரர்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.
• ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். தொற்று இருப்பது உறுதியானால், பாதிக்கப்பட்டவர்களையும், அவரது குடும்பத்தினரையும், அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தி இருக்க சொல்லலாம்.
• கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் கூடிய படுக்கை வசதிகள், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வசதிகள் மற்றும் தற்காலிக மருத்துவமனைகள் போன்றவற்றை அரசு சார்பில் மாநிலங்களுக்கு அமைத்து தர வேண்டும்.
• கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சை பெறுவோருக்கு, மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் வழங்க வேண்டும்.
• நாள்பட்ட கொரோனா நோயாளிகள் மற்றும் தொற்று பாதிக்கப்பட்ட முதியவர்களை சிகிச்சை மையத்திற்கு அழைத்து சென்று சிகிச்சை தரவேண்டும்.
• மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை ஒவ்வொரு மாநில அரசும் தீவிரப்படுத்த வேண்டும். கொரோனா தடுப்பு பணிகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும், அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, தொற்று குறைவது குறித்து மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments