மணிரத்னம் பட நடிகை மீது முறைகேடு புகார்: சிபிஐ விசாரணை
- IndiaGlitz, [Saturday,December 14 2019]
மணிரத்னம் இயக்கிய ’ஓகே கண்மணி’ மற்றும் சமீபத்தில் வெளியான ’ஆதித்ய வர்மா’ போன்ற படங்களில் நடித்தவர் லீலா சாம்சன். இவர் முன்னாள் சென்சார் அமைப்பின் தலைவரும் ஆவார். இவர் சென்னை கலாக்ஷேத்ரா அறக்கட்டளையின் ஆடிட்டோரியத்திற்கு முறைகேடாக செலவீனம் செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 1985ஆம் ஆண்டு கட்டப்பட்ட கலாக்ஷேத்ரா அறக்கட்டளையால் ஆடிட்டோரியம் கடந்த 2006ஆம் ஆண்டு புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது. அந்த சமயத்தில் அறக்கட்டளையின் இயக்குநராக பதவி வகித்த லீலா சாம்சன், முறைகேடாக செலவு செய்ததாக புகார் எழுந்தது. இவர் மட்டுமின்றி இவருடன் சேர்த்து கணக்கு அலுவலர் மற்றும் பொறியியல் அதிகாரி ஆகியோரின் பெயர்களையும் சிபிஐ வழக்கில் பதிவு செய்துள்ளது.
பொதுநிதி விதிகளை மீறி புனரமைப்புப் பணிகளுக்கான ஒப்பந்தம் செய்ததாகவும் கூடுதலாக ரூ.6.02 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறக்கட்டளை அதிகாரிகள் சிபிஐக்கு அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.