ED ரெய்டுக்குள்ளான பிரபல நிறுவனத்தின் மீதான வழக்கு ரத்து: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

  • IndiaGlitz, [Thursday,February 08 2024]

அமலாக்கத்துறை சோதனைக்கு உள்ளான பிரபல கட்டுமான நிறுவனமான ஓசன் லைப் பேசஸ் நிறுவன இயக்குனர் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னையில் இயங்கி வரும் பிரபல கட்டுமான நிறுவனம் ஓசன் லைப் பேசஸ் நிறுவனத்தை எஸ்கே பீட்டர், ஸ்ரீராம் ஆகிய இருவரும் இணைந்து நடத்தி வந்தனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்த நிலையில், நிறுவனத்தில் தனக்கு சேர வேண்டிய பங்கை எஸ்கே பீட்டர் தர மறுத்ததாக கூறி ஸ்ரீராம் சென்னை காவல் துறையிடம் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 பிரிவுகளில் எஸ்கே பீட்டர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் சார்பில் 50 கோடி ரூபாய் பண பரிமாற்றம் நடந்ததாக புகார் அளித்ததை அடுத்து முறைகேடாக பண பரிமாற்றம் நடந்துள்ளதா? என்பதை அறிய அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த நிறுவனத்தின் அலுவலகங்களில் சமீபத்தில் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் தங்களுக்கு இடையே சமரசம் ஆகிவிட்டதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று எஸ்கே பீட்டர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதேபோல் ஸ்ரீராம் தரப்பிலும் இந்த விவகாரத்தில் தாங்கள் சமரசமாக இருப்பதாக கூறியதை அடுத்து இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி எஸ்கே பீட்டர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.