இப்போதைக்கு குழந்தை வேண்டாமா? பாதுகாப்பான எளிய வழிமுறை!
Send us your feedback to audioarticles@vaarta.com
பரபரப்பான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெரும்பாலான தம்பதிகள் பெரும்பாலும் கர்ப்பத் தடையை விரும்புகின்றனர். அதிலும் புதிதாக திருமணம் செய்துகொண்ட தம்பதிகள், பொருளாதார காரணங்களுக்காக குழந்தை பிறப்பை தள்ளிப்போட நினைக்கும் தம்பதிகள், லிவிங் முறையில் வாழ்க்கை நடத்தும் காதலர்கள் எனப் பலரும் குழந்தைப் பிறப்பை சிறிதுகாலம் தள்ளிப்போடவே விரும்புகின்றனர்.
இப்படி கர்ப்பத் தடையை விரும்பும் தம்பதிகளில் சிலர் கையாளும் ஒரு வழிமுறை – குறிப்பிட்ட நாட்களில் உடலுறவை தவிர்ப்பது.
அதாவது மாதவிடாய் வந்த முதல் நாளில் இருந்து நாட்களை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்தமுறையில் மாதவிடாய் வந்த 10 ஆம் நாள் தொடங்கி 18 ஆம் நாட்கள் வரை உடலுறவு கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த நாட்களில்தான் பெரும்பாலும் கருமுட்டைகள் உருவாகும். எனவே கர்ப்பத்தை இந்த முறையில் தவிர்க்க முடியும் என நம்புகின்றனர்.
ஆனால் சமீபகாலமாக மாதவிடாய் நாட்களை எண்ணிக்கொண்டு உடலுறவு வைத்துக் கொள்ளும் சிலருக்கு பாதகமான முடிவுகளும் கிடைத்து விடுகின்றன.
காரணம் நவீன வாழ்க்கை முறை, உணவுமுறையைக் கொண்டிருக்கும் பொரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி முறையாக வருவதில்லை. இதனால் மாதவிடாய் சுழற்சியை வைத்து கருமுட்டையின் வளர்ச்சியையும் சிலருக்கு சரியாக கணிக்க முடிவதில்லை. எனவே மாதவிடாய் நாட்களை எண்ணி உடலுறவு வைத்துக்கொள்ளும் பழைய முறை முற்றுப்புள்ளி வைப்பதே சிறந்தது.
இதனால் கர்ப்பத் தடையை விரும்பும் தம்பதிகளுக்கு பெரிதும் பக்கபலமாக இருப்பது கருத்தடை மாத்திரைகள்தான். இந்த முறையில் 98% வரை பாதுகாப்பு கிடைக்கிறது. எனவே நல்ல மருத்துவரை அணுகி கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.
கருத்தடை மாத்திரைகளில் இருக்கும் ஒரு பெரிய சிக்கல் கொடுக்கப்பட்ட மாத்திரைகளை சரியான நேரத்தில் ஒருதடவைகூட விடுபடாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை மறதியால் ஒருதடவை சாப்பிடாமல் விட்டுவிட்டால்கூட கர்ப்பத் தடைக்கான பாதுகாப்பு வளையம் அறுபட்டு விடும்.
கருத்தடை மாத்திரைகளை பல நிறுவனங்கள் தயாரிக்கின்றன. அதேபோல கருத்தடை மாத்திரைகளில் அவசர கருத்தடை மாத்திரை, வாரத்திற்கு ஒருமுறை எடுத்துக் கொள்வது, மாதவிடாய்க்கு பிறகு சில குறிப்பிட்ட நாட்களில் எடுத்துக் கொள்வது எனப்பல வகைகள் உண்டு.
இதைத்தவிர கருத்தடை மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் சிலருக்கு அரிதாக உடலஎடை கூடுவது, வாந்தி, குமட்டல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுகிறது. எனவே அவரவர் உடலுக்கு ஒத்துப்போகிற கருத்தடை மாத்திரைகளை, மருத்துவர்களை அணுகி பரிந்துரையின் பேரில் பயன்படுத்தலாம்.
மேலும் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தும்போது உடல்எடை கூடாமல் பார்த்துக் கொள்வது அவசியம். இதனால் ஹார்மோன் இன்பேலன்ஸ் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தும்போது சிறிது இடைவெளி விட்டு பயன்படுத்துமாறு மருத்துவர்கள் அறிவுரை கூறுகின்றனர். இதனால் சிறுசிறு இடைவெளிகளுக்கு மத்தியில் 1இல் இருந்து 2 வருடம் வரை இத்தகைய மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். அதிகப்பட்சம் 5 வருடம் வரை இப்படி கருத்தடை மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
கருத்தடை மாத்திரைகள் என்பது ஒரு சில வருடங்களுக்கான குறுகிய வழிமுறையே தவிர வாழ்நாள் முழுவதும் பயன்படுத்துவதற்கு இது உகந்ததும் அல்ல. காரணம் என்னதான் கருத்தடை மாத்திரைகளில் பக்கவிளைவுகள் இல்லை என்று கூறினாலும் அதுவும் மருந்து என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
எனவே நீண்டகால மற்றும் முழுமையான பாதுகாப்புக்கு ஆணுறைகள்தான் மிகவும் சிறந்த சாதனமாக கருதப்படுகிறது. இதில் ஒரு குழந்தை பிறந்த பிறகு சிறிது இடைவெளியை விரும்பும் பெண்களுக்கு “காப்பர் டி“ சிறந்த வழிமுறையாகக் இருக்கிறது. இதைத்தவிர நிரந்தரமான தீர்வை எதிர் நோக்கும் தம்பதிகளுக்கு கர்ப்பத்தடை அறுவை சிகிச்சையே சிறந்தது.
இதற்கிடையில் 3 மாதத்திற்கு ஒருமுறை எடுத்துக்கொள்ளும் ஊசி மருந்துகளும் தற்போது புழக்கத்தில் இருக்கின்றன. அரசு மருத்துவமனைகளில் இதன் பயன்பாடு சமீபகாலமாக அதிகரித்து இருககிறது. எனினும் ஊசி, மாத்திரைகள் என்றைக்கும் பக்கவிளைவுகளை கொண்டிருக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com