தமிழகஅரசு கையால் விருது வாங்கிய காப்பகம்… குழந்தையை காசுக்கு விற்றது அம்பலம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
மதுரையில் உள்ள தனியார் ஆதரவற்றோர் காப்பகம் ஒன்றில் வளர்ந்து வந்த 1 வயது ஆண் குழந்தையை அந்தக் காப்பகத்தில் இருந்தோர் கொரோனாவில் இறந்ததாக நாடகமாடி ரூ.5 லட்சத்திற்கு விற்றுவிட்ட சம்பவம் கடந்த சில தினங்களாக கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இதயம் எனப்படும் அந்தத் தனியார் காப்பகத்தின் உரிமையாளர் கலைவாணி என்பவருக்கு தமிழக அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு சுதந்திரத் தினத்தின்போது “மாநில இளைஞர் விருது” வழங்கி கவுரவித்து இருக்கிறது. அதுவும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கையால் கலைவாணிக்கு விருது வழங்கப்பட்டது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் அந்த காப்பகத்தில் இருந்த அருண் என்பவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திரத் தின விழாவின்போது அதே “மாநில இளைஞர் விருது” வழங்கி கவுரவிக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆதரவற்றோர்களுக்காக இயங்கிவந்த இதயம் காப்பகத்தில் ஐஸ்வர்யா என்பவருடைய ஒரு வயது குழந்தை ஒன்று வளர்ந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஜுன் 16 ஆம் தேதி அந்தக் காப்பகத்தில் இருந்த 75 முதியவர் ஒருவர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளார்.
அவரது உடலை காப்பகத்தைச் சேர்ந்தோர் அடக்கம் செய்துள்ளனர். அப்படி அடக்கம் செய்யப்பட்டபோது ரசீது பெற்றப்பட்டு உள்ளது. அந்த ரசீதில் குழந்தையின் பெயரை திருத்தி எழுதி, குழந்தை கொரோனா பாதிப்பின் காரணமாக உயிரிழந்து விட்டது என்றும் அந்தக் குழந்தையை நாங்களே அடக்கம் செய்துவிட்டோம் என்றும் கூறி காப்பகத்தில் இருந்தோர் நாடகமாடி உள்ளனர்.
இந்நிலையில் மாணிக்கம் என்ற அந்த 1 வயது குழந்தையை மதுரை இஸ்மாயில்புரத்தில் நகைக்கடை வைத்துள்ள கண்ணந்பவானி தம்பதிக்கு 5 லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதோடு இதே காப்பகத்தில் வளர்ந்து வந்த 2 வயது பெண் குழந்தையையும் ஒரு தம்பதியரின் வீட்டில் இருந்து தற்போது கல்லாகுளம் போலீசார் மீட்டுள்ளனர்.
இதனால் ஆதரவற்ற 2 குழந்தைகளை விற்ற வழக்கில் இதயம் காப்பகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் இடைத்தரகர்கள் என 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout