'தனி ஒருவன்' தயாரிப்பு நிறுவனத்திற்கு தயாரிப்பாளர் சங்கம் தடை
- IndiaGlitz, [Tuesday,September 22 2015]
சமீபத்தில் வெளியான கோலிவுட் திரைப்படங்களில் எதிர்பாராத மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் 'தனி ஒருவன்' என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்த படத்திற்கு பின்னர் வந்த பல படங்களின் வசூலை விட 'தனி ஒருவன்' படத்தின் வசூல் இன்னும் அதிகமாகவே உள்ளது.
இந்நிலையில் 'தனி ஒருவன்' படத்திற்காக அதன் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் அதிகப்படியாக புரமோஷன் செலவு செய்ததாக குற்றம் சாட்டி அந்நிறுவனத்திற்கு தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது. இனிமேல் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் படங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அர்ச்சனா கல்பாத்தி தனது அதிர்ச்சியை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோலிவுட் திரைப்படங்கள் அனைத்தும் ஒருசில நாளிதழ்கள், எப்.எம். வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் மட்டுமே விளம்பரம் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் கட்டுப்பாடு விதித்திருந்தது. ஆனால் இந்த கட்டுப்பாட்டை மீறி 'தனி ஒருவன் திரைப்படம் முன்னணி தொலைக்காட்சி, நாளிதழ்கள், எப்.எம் வானொலிகள் அனைத்திலும் விளம்பரப்படுத்தியதால் இந்த தடை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.