விஜய், அஜித் இருவரும் சேர்ந்தார் போல் இருக்கிறார் விஜித்: தங்கர்பச்சானின் டக்குமுக்கு திக்கு தாளம் இசை விழா
Send us your feedback to audioarticles@vaarta.com
பிஎஸ்என் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஜார்ஜ் டயஸ், சரவணராஜா இணைந்து தயாரிக்க, தங்கர்பச்சான் இயக்கத்தில் டக்கு முக்கு டிக்குதாளம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அப்படத்தின் குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பேசியதாவது:
இயக்குனர் கஸ்தூரி ராஜா பேசும்போது, இரண்டாவது முறையாக பையனை பெற்றெடுக்கும் தங்கர் பச்சானுக்கு வாழ்த்துகள். இப்படத்தின் டிரைலர் மற்றும் 3 பாடல்கள் பார்த்தோம். படத்தைப் பற்றி பயம் கொள்ளத் தேவையில்லை. விஜித் பச்சான் நன்றாக வருவதற்கு பல அறிகுறிகள் இருக்கிறது. துள்ளுவதோ இளமை படத்தை வாங்குவதற்கு யாரும் முன் வரவில்லை. அதில் ஒருவரை அழைத்து அவருக்காகவே பிரத்யேக காட்சியை காண்பித்தேன். அவர் பாதியிலேயே கிளம்பிவிட்டார். நான் போனில் அழைத்து பேசிய போது நமது பையனை நாம் பார்க்கலாம். காசு கொடுத்து பார்ப்பவர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்றார். ஆனால், அவரே இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு எப்படியாவது தனுஷ் படத்தை வாங்கி கொடுங்கள் என்று கேட்டார். விஜித்தும் அதுபோல வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.
இயக்குனர் வெற்றி மாறன் பேசும்போது, தங்கர் பச்சான் ஒளிப்பதிவு செய்து பல படங்கள் பெரிய வெற்றிகளைக்கொடுத்திருக்கிறது. இயக்குநராகவும் வெற்றி பெற்றிருக்கிறார். விஜித் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதும் உடனே நடிக்க வைக்காமல் 8 ஆண்டுகள் பயிற்சிகள் கொடுத்து பல தேர்வுகள் வைத்து இன்று நடிக்க வைத்திருக்கிறார். முதல் படத்தில் எந்தளவிற்கு நடிக்க முடியுமோ அதை சிறப்பாக நடித்திருக்கிறார் என்று தோன்றுகிறது. விஜித்திற்கு வாழ்த்துக்கள் என்றார்.
நடிகர் நாசர் பேசும்போது, வழக்கமான மேடையில் வார்த்தைகள் பகிரபட்டிருக்கும். ஆனால் இந்த விழாவில் பேசியது அனைவரின் உள்ளத்தில் இருந்து வந்த வார்த்தை. விஜித்தைஅறிமுப்படுத்தும் விழாவாக இருக்கிறது. என் மகன் தான் என்னை அழைத்து வந்தான். நான் சிரித்துக் கொண்டே வந்தேன். ஏன் அப்பா சிரிக்கிறீர்கள் என்று கேட்டான். நான் கல்லூரியில் முதல் நாள் சென்ற போது ராக்கிங் செய்தது தங்கர் பச்சான் தான். அன்று என் பெயர் என்ன என்று கேட்டார். நான் நாசர் சார் என்றேன். ஏன் தமிழ் வராதா என்று அதட்டினார். அவர் மூலம் தமிழ் இலக்கிய புத்தகங்கள் வாசித்திருக்கிறேன். யூகியும் தங்கர்ப்பச்சானும் என்னை நண்பர்கள் என்று கூறினார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை இருவரும் எனக்கு ஆசிரியர்கள். அவர்களிடம் நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன்.
அவரிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் தன்னிலை மாறாமல் இருப்பது. இன்றுவரை இதயமும், அறிவும் வளர்ந்து கொண்டிருக்கிறது. விஜித் நடிக்க வரும்போது முதலில் வேண்டாம் என்று கூறியது நான் தான். வேறு எதாவது கற்றுக் கொண்டு பின்பு நடிக்க வா என்றேன். என் பிள்ளைகளுக்கும் இதே தான் கூறினேன். ஆனால், இந்த கால குழந்தைகள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். இது என்னுடைய குடும்ப விழா போன்று தோன்றுகிறது. அனைவருடன் சேர்ந்து விஜித்தை மனதார வாழ்த்துகிறேன் என்றார்.
இயக்குநர் பேரரசு பேசும்போது, இங்கு வந்ததில் இருந்து விஜித்தை பார்த்துக் கொண்டே இருந்தேன். விஜித் பச்சானை பொறுத்தவரையில் அப்பா பெரிய இயக்குனர். ஆரம்பக் கட்டத்தில் தங்கர் பச்சான் சினிமாவிற்கு வரும்போது ஏழையாக இருந்தார். ஆனால், இப்போது மிகப் பெரும் செல்வாக்கு உடையவர். விஜித்தின் தோற்றம் அப்படிப்பட்டசெல்வாக்கான குடும்பத்தில் வளர்ந்தவர் போல் இல்லை. ஒரு சாதாரண விவசாய குடும்பத்து மகன் போன்று தான் இருக்கிறார். இந்த படத்தின் வெற்றி அவரை மாற்றிவிடும் என்பது உறுதி. எனக்கு தமிழ் சினிமாவில் 10 படங்கள் மிகவும் பிடிக்கும் அதில் ஒன்று அழகி. உணர்வை திரையில் பதிவு செய்பவர்கள் தான் சிறந்த இயக்குனர். காட்டிற்குள் போகும்போது பல விலங்குகளின் கால் தடங்கள் இருக்கும். ஆனால், யானை மற்றும் புலியின் கால் தடங்கள் தான் கவனத்தை ஈர்க்கும். அதேபோல், சிலர் தான் தங்களின் கால் தடங்களைப் பதிப்பார்கள். அதில் ஒருவர் தங்கர் பச்சான். சினிமாவில் நாம் நன்றியும் விசுவாசத்தையும் எதிர்பார்க்க முடியாது.அதனால் தான் தங்கர் பச்சான் பிற இயக்குனர்களை நம்பாமல் தானே களத்தில் இறங்கியிருக்கிறார். விஜய், அஜித் இருவரும் சேர்ந்தார் போல் இருக்கிறார் விஜித். முதன்முதலில் அப்பாவுடன் நடிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்திருக்கிறார். அந்தளவு தன்னம்பிக்கை கொண்டவர் விஜித். தன்மான தமிழன் தங்கர் பச்சான். தன்மீது நம்பிக்கை வைத்து கால் பதித்திருக்கும் விஜித் நிச்சயம் வெற்றி பெறுவார் என்றார்.
இயக்குனர் பாண்டிராஜ் பேசும்போது, நான் நிறைய புத்தகங்கள் படிப்பதற்கு காரணம் தங்கர் பச்சான் தான். நான் நல்லது செய்தால் பாராட்டுவார். அதேபோல் தவறு செய்தாலும் சுட்டிக் காட்டுவார். எனக்கு பெற்றோர் இல்லை. அவர் எனக்கு அப்பா போல அக்கறையோடு இருப்பார். அவருடைய மகன் விஜித் சிறப்பாக வர வேண்டும்.விஜித் நடிகர் ஆவார் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. ஆனால், காலம் தான் அவரை நடிக்க வைத்திருக்கிறது என்றார்.
யூகி சேது பேசும்போது, தங்கர் பச்சான் என்னுடைய கிளாஸ் மேட். நான், நாசர், தங்கர் பச்சான் மூவரும் ஒரே அறையில் தான் தங்கியிருந்தோம். சிரிப்பு சத்தம் இருக்கும் இடத்தில் தங்கர் பச்சான் இருப்பார். விஷயமே இல்லையென்றாலும் சிரிக்க வைப்பார். அதே சிரிப்பு விஜித்திடம் இருக்கிறது. வெற்றி மாறனிடம் பேசும்போது, தங்கர் பச்சான் தான் கீராவின் வளர்ப்பு தந்தை என்று கூறலாம். கரிசல் நாட்டு இலக்கியங்களையும் தமிழ் இலக்கியங்களையும் சினிமா மூலம் வளர்த்தெடுத்தவர் தங்கர் பச்சான். அவருக்குப் பிறகு வெற்றி மாறன் அதை செய்து வருகிறார். பல திறமைகள் தங்கர் பச்சானிடம் இருக்கிறது. தங்கர் பச்சானுக்கு, அர்ஜுனனுக்கு இருக்கும் திறமைகளில் ஒன்று என்பது போல் தான் ஒளிப்பதிவு என்பது. எங்கள் மூன்று பேருக்கும் எந்தவொரு கெட்டப் பழக்கமும் இல்லை. அதிலும் நாசர் மிகச் சிறந்த ஒழுக்கம் நிறைந்தவர். டைட்டானிக் படத்தை 55 நாட்களில் எடுத்து முடிக்கும் திறமை இயக்குநர் ரவிக்குமார் தான். பேரரசுவிற்கு ஊரரசு என்று பெயர் வைத்திருக்கிறேன்.
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசும்போது விஜித்திற்கு கண் அழகாக இருக்கிறது. அது அவருக்கு பெரிய ப்ளஸ். தங்கர் பச்சான் ஒரு முன் கோபி. ஆட்டோகிராப் படத்தின் விழாவில் கிளாசிக் படங்களை புகழ்ந்து பேசி, கமர்ஷியல் படத்தை விமர்சித்தார். நான் கமர்ஷியல் இயக்குனர் தான். ஆகையால், தான் அவர் படங்களை ஒப்பீட்டு பார்க்க முடிகிறது. இருப்பினும், இப்போது அவரே கமர்ஷியல் படம் இயக்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
நடன இயக்குனர் தினேஷ் பேசும்போது பாடல்கள் நன்றாக இருந்தது. இரண்டு பாடல்கள் செய்தோம். அதில் என்னிடம் இப்படி பண்ணலாமா? இது நன்றாக இருக்குமா? என்று கேட்டுக் கொண்டே இருப்பார். அதிலிருந்தே அவருடைய ஆர்வம் தெரிந்தது. எங்கு சாப்பிட்டாலும் தங்கர் பச்சானின் நினைவு தான் வரும். கிரீன் சட்னி, வொயிட் ரைஸ் என்று கூறினால் புதினா சட்னி, சாதம் என்று சொல்ல தெரியாதா என்ற திட்டுவார் என்றார். நடன இயக்குநர் ராதிகா பேசும்போது தங்கர் பச்சான் சாரிடம் தான் நாங்கள் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டோம். இன்று அவர் மகனுக்கு நடனம் கற்றுக் கொடுப்பதில் மகிழ்ச்சி. விஜித் மிகவும் திறமையான மனிதர். டூயட் பாடலை சிறப்பாக முடித்துவிட்டோம். நடனம் மட்டுமில்லை சிறப்பாக நடித்தும் இருக்கிறார். இவற்றையெல்லாம் அவருடைய அம்மா திரையில் பார்த்துக் கொண்டிருக்கிறார். விஜித் வெற்றியடைய வாழ்த்துகள் என்றார்.
உளவியல் மருத்துவர் அபிலா ஷா பேசும்போது, விஜித் பல திறமைகள் கொண்டவர். இங்க பேசியவர்கள் தமிழில் தான் பேசுவார் என்றார்கள். தமிழுக்கு பிறந்து தமிழில் பேசுவதில் ஆச்சரியமில்லை. அவருக்கு மருத்துவம் பார்க்கும்போது என்னுடைய தம்பியாக நினைத்து தான் பார்த்தேன். விஜித், அஜித் இருவரிடம் இருக்கும் திறமை ஒருசேர விஜித்திடம் இருக்கிறது. அதற்கு நான் சாட்சி. விஜித் பல சாதனைகள் புரிய வாழ்த்துகள் என்றார்.
இசையமைப்பாளர் தரண் பேசும்போது, தங்கர் பச்சான் சாருடன் படம் பண்ணுவதை பாக்கியமாக கருதுகிறேன். அழகி படம் வந்து 20 வருடங்கள் ஆனாலும், இன்னும் அந்த படத்தைப் பற்றி பேசுகிறோம். நமக்கு அதுபோன்ற வாய்ப்பு வராதா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்போது தான் அவரிடம் இருந்து அழைப்பு வந்தது. நாங்கள் தேவா சார் இப்பாடலை பாடினால் நன்றாக இருக்கும் என்று ஆலோசித்து அவரிடம் அணுகினோம். அவரும் பாடிக் கொடுத்திருக்கிறார். அவரிடம் உங்களிடம் இருந்து தான் டீயூனை சுட்டிருக்கிறோம் என்று கூறினேன். அப்படியெல்லாம் இல்லை இசை நன்றாக இருக்கிறது என்றார்.
நடிகர் ஆரி பேசும்போது, எல்லோரும் கூறியது போல தங்கர் பச்சான் அவரின் மகனுக்கு விஜய், அஜித் படத்தை சேர்த்து வைத்திருக்கிறார். பாண்டிராஜ் இயக்கிய எதற்கும் துணிந்தவன் படத்தை பார்த்தேன். சிறப்பாக அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா பச்சன் மற்றும் ஆராத்யா பச்சன் போல் தமிழ்நாட்டிற்க விஜித் பச்சான் கிடைத்திருக்கிறார். தங்கர் பச்சான் ஒருபோதும் கதாநாயகனை நம்பி படத்தை எடுத்ததில்லை. கதையின் நாயகனாக தான் படம் எடுத்து வெற்றி பெற்றார். அதேபோல், விஜித்தும் கதையின் நாயகனாக இருக்கும் படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி பெற வேண்டும் என்றார்.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, காலேஜில் எனக்கு ஜுனியர். பிறகு என் ஒளிப்பதிவாளர் ரவியாதவிடம் உதவியாளராக இருந்தபோது,அவருக்கு ஒரு காட்சி பிடிக்கவில்லையென்றால், இதெல்லாம் ஒரு ஷாட்டா என்று திட்டுவார். தங்கர் பச்சான் நம் திறமையையும் பாராட்டுவார். அதேபோன்று குறை இருந்தாலும் சுட்டிக் காட்டுவார். ஆனால், உணர்வுபூர்வமாக படம் எடுக்கக் கூடியவர். களவாடிய பொழுதுகள் படம் பார்த்தேன். என்ன அருமையாக எடுத்திருக்கிறார். அடுத்து அம்மாவின் கைபேசி படம் பார்த்தேன். அதன்பிறகு இவர் திருந்த மாட்டார், இதுபோன்ற படங்கள் தான் எடுப்பார் என்று விட்டுவிட்டேன். ஆனால், இப்போது இந்த படத்தை அவர் இயக்கியிருப்பதில் மகிழ்ச்சி.
நாம் அனைவரும் தமிழைக் கற்றுக் கொண்டோம். ஆனால், தங்கர் பச்சான் தமிழைக் கட்டிக் கொண்டிருக்கிறார். அவரின் மனைவி பெயர் கூட தமிழ் தான். அவருடைய மகன் நடிக்க வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி. தமிழ் சினிமாவில் மைனஸ் தான் வெற்றி. குறை கூறுகிறார்கள் என்றால் நம்மை ஏற்றுக்கொண்டார்கள் என்று அர்த்தம். ஆகையால், விஜித் தைரியமாக இரு, நிச்சயம் வெற்றி பெறுவாய். நான் இயக்கினால் அப்படத்தில் விஜித் தான் நாயகன். இயக்குநரின் பிள்ளைகள் நடிகரானால் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். ஆரி கூறியது போல் கதை தான் நாயகன். கதைக்காகத்தான் நாயகர்கள் வெற்றிப்பெற்றார்கள். இப்படத்திலும் நிச்சயம் ஏதோவொரு கருத்து நிச்சயம் இருக்கும் என்றார்.
இயக்குனர் தங்கர் பச்சான் பேசும்போது, எத்தனையோ பேரை வளர்த்தெடுத்த 412 ஏக்கர் கல்லூரி இன்று 12 ஏக்கராகஇருப்பது வருத்தமளிக்கிறது. டக்கு முக்கு டிக்கு தாளம் மாறிக் கொண்டே இருக்கும். அதுதான் இப்படம். ஒருவனிடம் பணம் நிறைய இருக்கிறது. ஆனால், அவனிடம் நிம்மதி இல்லை. இன்னொருவன் பணம் கையில் இல்லை. அவர்கள் என்னவாகிறார்கள் என்பதே இப்படத்தின் ஒருவரி கதை. போடா போடி என்ற பாடல் இன்னும் பல வருடங்கள் ஆனாலும் தனித்து நிற்கும். ஆனால், தரண் என்று தெரியாது. இந்த படத்திற்கு இசைப் பணியை யாரிடம் கொடுக்கலாம் என்று என் மகனுடன் யோசித்துக் கொண்டிருந்தோம். அப்போது என் மகன் தான் போடா போடி இசையமைத்த தரணின் தம்பி என்னுடன் தான் படிக்கிறான் என்றான். உடனே அழைத்து பேசினோம். காட்சிகளைக் கூறியது சிறிது நேரத்தில் இசையமைத்து விட்டார். நானும் கூடவே பாடலை எழுதி விட்டேன்.
நான் தீவிரமான எம்ஜிஆர் ரசிகன். சிறு வயதில் எந்த படத்தில் சண்டைக் காட்சிகள் இருக்கிறதோ அந்த படத்திற்குத்தான் செல்வேன். அப்படித்தான் சினிமா வளர்த்தெடுத்தது. என் மகன் விஜித் என்னுடைய இயக்கத்தில் நடிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தான். இல்லையென்றால் 6 வருடங்களுக்கு முன்பே நடிக்க வைத்திருப்பேன். பல பேரிடம் கதைகளை கேட்டான். அதில் சில படங்கள் மாபெரும் வெற்றிப் பெற்றிருக்கிறது. சில படங்கள் தோல்வியை சந்தித்துள்ளது. உன்னுடைய வருமானத்தில் 10 சதவீதம் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு கொடுக்க வேண்டும். உழைப்பில் மட்டுமே வந்த பணத்தை வைத்து எடுத்த படம். நாடாளுமன்றத்திற்கு இணையானது ஊடகத் துறை. கிருஷ்ணவேணி திரையரங்கில் அழகி படம் 110 நாட்கள் ஓடியிருக்கிறது. ஒன்பது ரூபாய் நோட்டு இந்த திரையரங்கில் ஓடியது. இனி நாங்கள் குடும்பத்துடன் இங்கு வந்து தான் படம் பார்ப்போம். என் மகனை வளர்த்தது என் மனைவி தான். அவருக்கு நன்றி என்றார்.
தயாரிப்பாளர் சரவண ராஜா பேசும்போது, எங்களுக்கு சினிமாவில் நேரடியாக தொடர்பு கிடையாது. இத்திரைப்படம் தொடங்கியதில் ஒரு மையப்புள்ளி இருக்கிறது. என் நண்பர் ஜார்ஜ் டயஸ்-க்கு சினிமாத் துறையில் கால் பதிக்க வேண்டும் என்று கூறினார். அப்படித்தான் இப்பயணம் தொடங்கியது. தங்கர் பச்சான் அண்ணனின் நம்பிக்கையில் ஒவ்வொரு அடியும் எடுத்து வைத்திருக்கிறோம். எங்கள் அலுவலகத்தில் ஒரு பகுதியை கொடுத்திருந்தோம். அவர் அலுவலகத்தை வைத்திருப்பதும் ஒரு அழகு. தேநீர் அருந்துவதும் அழகு. இப்படம் ஒரு கூட்டு முயற்சி. அதை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்திருக்கிறார். சோனி மியூசிக் நிறுவனம் முன்வந்தது எங்களுக்கு மைல்கல். விஜித் வெற்றியடைய வாழ்த்துகள் என்றார்.
படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜார்ஜ் டயஸ் பேசும்போது, விஜித்தை எனக்கு 8 வருடங்களாக தெரியும். 5டி கேமராவைக் கற்றுக் கொடுத்ததுவிஜித் தான். அதேபோல் படம் பிடித்து எனக்கு காண்பித்தார். விஜித் எப்போதும் சும்மா இருக்க மாட்டார். அவ்வப்போது, என்ன செய்கிறாய் என்று கேட்பார். சும்மாதான் இருக்கிறேன் என்று கூறினால், நடனம் கற்றுக் கொள்ளலாம், அதைக் கற்றுக் கொள்ளலாம் என்று ஒவ்வொன்றாக அழைத்துச் செல்வார். அவர் வெற்றியடைய வாழ்த்துகள் என்றார்.
நடிகர் அருண் பேசும்போது, என் நண்பனுக்கு இன்று முக்கியமான நாள். ஒவ்வொரு கலைஞனுக்கும் இசை வெளியீட்டு விழா என்பது மிக முக்கியம். நானும் விஜித்தும் ஒரே நேரத்தில் வேறு வேறு காலேஜில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தோம். இருப்பினும், நாம் பேசும்போது சின்ன சின்ன வார்த்தைகளுக்கும் தமிழில் தான் பேசுவார்.
தயாரிப்பாளர் வீரசக்தி பேசும்போது, தங்கர் அண்ணாவுடன் 11 ஆண்டுகள் பழக்கம். பலரும் என்னிடம் கேட்பார்கள்எப்படி அவருடன் இத்தனை ஆண்டு காலம் இருக்கிறீர்கள் என்று கேட்பார்கள். அதற்கு நான், வெள்ளந்தி என்ற வார்த்தை தங்கர் பச்சான் அண்ணனுக்கு தான் பொருந்தும் என்று கூறுவேன். இந்த விழாவிற்கு அவர் என்னை அழைத்தபோது இது என் குடும்ப விழா விஜித்தை வாழ்த்த நான் நிச்சயம் வருவேன் என்றேன். விஜித் வெற்றி பெற வாழ்த்துகள் என்றார்.
நடிகர் விஜித் பச்சான் பேசும்போது, என் முகத்தை பார்க்காமலேயே தயாரிக்க முன் வந்த தயாரிப்பாளர்களுக்கு மிக்க நன்றி. அழகி படத்தை விடவும் இந்த படத்தில் தான் அப்பா பதட்டமாக இருந்தார். கஸ்தூரி ராஜா சார் வீட்டிற்கு முன்பே சென்றிருக்கிறேன். அவரின் கையாலும், வெற்றிமாறன் இருவரின் அறிமுகத்தில் வருவதில் மகிழ்ச்சி. தினேஷ் மாஸ்டருக்கும் எனக்கு நல்ல புரிதல் இருக்கிறது. சில்வா மாஸ்டர் என்னை அடித்து சொல்லிக் கொடுத்தார். சாபு சார் பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தார்.
பத்திரிகையாளர்களும், மக்களும் பல நடிகர் நடிகைகளைப் பார்த்திருப்பீர்கள். அவர்களின் நிறை குறைகளை சுட்டிக் காட்டியது போல் என்னிடம் இருக்கும் நல்லது கெட்டதுகளை சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி என்றார்.
இறுதியாக, படத்தின் இசைத்தட்டு வெளியிடப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout