'தங்க மகன்' திரைவிமர்சனம்.
Send us your feedback to audioarticles@vaarta.com
'வேலையில்லா பட்டதாரி' என்ற வெற்றி படத்திற்கு பின்னர் மீண்டும் தனுஷ்-வேல்ராஜ் இணைந்த படம், சமந்தா, எமிஜாக்சன் என இரண்டு முன்னணி நாயகிகள் நடித்த படம், அனிருத்தின் தெறி இசையில் வந்த படம் என ரிலீஸுக்கு முன்னர் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய தங்கமகன்' எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தாரா? என்பதை பார்ப்போம்.
கே.எஸ்.ரவிகுமார்-ராதிகா தம்பதிகளின் ஒரே மகன் தனுஷ், சதீஷ் மற்றும் உறவினர் அரவிந்த் ஆகியோர்களுடன் ஜாலியாக இருக்கின்றார். இந்நிலையில் ராதிகாவின் வேண்டுகோளுக்கு இணங்க தனுஷ் தன் நண்பர் சதீஷூடன் கோவிலுக்கு செல்கிறார். அங்கு தற்செயலாக எமிஜாக்சனை பார்க்கும் தனுஷ் அவர்மீது காதல் கொள்கிறார். நாளடைவில் எமிஜாக்சனும் காதல் கொள்ள இருவரும் வெளியூருக்கு பிக்னிக் செல்கின்றனர். அங்கு ஒரு சிறிய பிரச்சனையால் வாக்குவாதம் முற்றி இருவரும் பிரிந்துவிடும் நிலை ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி தன்னுடைய உறவினர் அரவிந்தையே எமிஜாக்சன் திருமணமும் செய்துகொள்கிறார். பின்னர் பெற்றோரின் விருப்பப்படி தனுஷ், சமந்தாவை திருமணம் செய்து கொள்கிறார்
இந்நிலையில் வருமான வரித்துறையில் பணிபுரியும் கே.எஸ்.ரவிகுமார் அலுவலகத்தில் ஏற்படும் ஒரு பிரச்சனையால் ஒருநாள் திடீரென தற்கொலை செய்துகொள்கிறார்.
தந்தையின் மரணத்தால் நிலைகுலைந்து போன தனுஷ், தனது தந்தையின் மரணத்திற்கு பின்னால் வேறு காரணம் இருக்கின்றது என்பதையும், இது பலகோடி ரூபாய் கைமாறிய பிரச்சனை என்பதையும் கண்டுபிடிக்கின்றார். தனது தந்தையின் மரணத்திற்கு உண்மையான காரணம் யார்? கைமாறிய கோடிக்கணக்கான பணம் எங்கே இருக்கின்றது என்பதை தனுஷ் கண்டுபிடிக்கின்றாரா? என்பதுதான் மீதிக்கதை
.
முதல்பாதியில் டீன் ஏஜ் பருவத்திலும் இரண்டாவது பாதியில் பொறுப்புள்ள குடும்பத்தலைவனாகவும் வரும் தனுஷின் நடிப்பில் மெருகேறியுள்ளார். தனுஷ்-எமிஜாக்சன் காதல் காட்சிகள், தனுஷ் -சதீஷ் காமெடி காட்சிகள் என முதல்பாதி ஜாலியாக செல்கிறது. இரண்டாவது பாதியில் தந்தையை இழந்த மகனாகவும், அம்மாவையும் மனைவியையும் சரியாக பார்த்து கொள்ள முடியவில்லை என்று துடிப்பதிலும் தனுஷின் நடிப்பு அற்புதம்.
முதல்பாதியில் இளமைத்துள்ளலாக வரும் எமிஜாக்சன், இரண்டாவது பாதியில் தனுஷின் உறவினருக்கே மனைவியானாலும் தனுஷுக்கு உதவும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கணவன் தன்னை கேவலப்படுத்தும்போதும், அடிக்கும்போதும் பதிலடி கொடுப்பது சூப்பர்.
சமந்தாவா இது என்று கேட்கும்படி அப்படி ஒரு அமைதியான நடிப்பு. தனது கணவர் குடும்பமே தனது குடும்பம் என்ற அழகான கேரக்டரை சமந்தாவும் மேலும் அழகூட்டியுள்ளார்.
அனிருத்தின் இசையில் 'என்ன சொல்ல' பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும். இந்த பாடலுக்கு வரும் காட்சிகளும் அருமை. குடும்பப்பாங்கான கதைக்கேற்ற பின்னணி இசை அமைத்துள்ள அனிருத், கிளைமாக்ஸுக்கு முந்தைய காட்சிகளில் தெறிக்க விடுகிறார்.
தனுஷ், சமந்தா, எமிஜாக்சன், அனிருத் என படத்தில் ஏகப்பட்ட பாசிட்டிவ் இருந்தாலும், திரைக்கதை வலுவிழந்து உள்ளது. குறிப்பாக தனுஷுக்கு இணையாக வீரியமான வில்லன் படத்தில் இல்லாதது பெரும் குறையாக தெரிகிறது. நிறைமாத மனைவியை கணவன் பிரசவத்துக்கு அழைத்து செல்லும்போது வில்லன் கோஷ்டியினர் வழிமறிப்பார்கள் போன்ற காட்சிகளை கடந்த ஐம்பது வருடங்களாக பார்த்து வருகிறோம். இந்த படத்தில் மீண்டும் ஒருமுறை பார்க்கலாம். ஐந்து கோடி ரூபாய் பணத்தை எடுத்தவர் யார்? இந்த படத்தின் மெயின் வில்லன் யார்? என்பதை சிறுகுழந்தைகூட கண்டுபிடித்துவிடும். இயக்குனர் வேல்ராஜ் இந்த விஷயத்தில் இன்னும் கொஞ்சம் யோசித்திருக்கலாம். ஆனாலும் ஜாலியான முதல் பாதியையும், ஹீரோயிசம் அதிகமின்றி காட்சிகளை இயல்பாக படமாக்கி, எல்லோரையும் அற்புதமாக வேலை வாங்கியுள்ளார் என்பதற்காக இயக்குனர் வேல்ராஜை பாராட்டலாம்.
குமரனின் ஒளிப்பதிவில் மிகைப்படுத்தப்படாத காட்சி அமைப்புகள் திருப்தி அளிக்கின்றது. அதேபோல் ராஜேஷ்குமார் படத்தொகுப்பும் கச்சிதம். பணம் ஒரு மனிதனை பணக்காரனாகவும் மாற்றும், பைத்தியக்காரனாகவும் மாற்றும்' என்ற கருத்தை சொல்லும் இந்த படம் 'விஐபி' அளவுக்கு விறுவிறுப்பாக இல்லாவிட்டாலும், முதல்பாதியின் ஜாலியான காட்சிகளுக்காக ஒருமுறை பார்க்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments