விஜய் ஏன் உயர்ந்த மனிதர்? ஒரு ரசிகரின் நிஜமான, நெகிழ்ச்சியான அனுபவம்

  • IndiaGlitz, [Wednesday,July 19 2017]

இளையதளபதி விஜய் கிட்டத்தட்ட சூப்பர் ஸ்டார் நெருங்கிவிட்டார், இருப்பினும் அவரிடம் கடந்த 20 வருடங்களுக்கு முன் இருந்த எளிமை அப்படியே உள்ளது. விஜய்யின் நடிப்பை விமர்சிப்பவர்கள் கூட அவரது எளிமையை பாராட்ட தயங்க மாட்டார்கள். தன்னை வாழ வைக்கும் ரசிகர்களுக்கு மதிப்பு தருவதில் விஜய் எப்போதுமே முதலிடத்தில் தான் இருந்து வருகிறார். இந்த நிலையில் ஒரு ரசிகரின் மெய்சிலிர்க்க வைக்கும் நிஜ அனுபவம் குறித்து தற்போது பார்ப்போம்
அன்று 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி. விஜய்யின் தீவிர ரசிகரான அவருக்கு அன்றைய பொழுது எப்போதும்போல ஒரு சாதாரண நாளாகத்தான் விடிந்தது. ஆனால் அன்றைய தினம் இளையதளபதி விஜய்யை சந்திக்கும் அனுமதி கிடைத்தவுடன் அது அவருக்கு ஸ்பெஷல் நாளாக மாறிவிட்டது. விஜய்யை நேரில் ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என்பது அவரது சிறுவயது கனவு.
கோவையை சேர்ந்த மாற்றுத்திறனாளியான அவருக்கு விஜய்யை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தவுடன் கைகால் ஓடவில்லை. மகிழ்ச்சியில் அவரது உள்ளம் துள்ளி குதித்தது. சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கத்தி' படத்தின் படப்பிடிப்பு தளத்தில்தான் அவருக்கு விஜய்யை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. விஜய்க்கு நெருக்கமானவர்கள் அந்த ரசிகரை குடும்பத்துடன் சந்திக்க ஏற்பாடு செய்திருந்தனர். அவர்களுக்கு நன்றி கூறிவிட்டு ஆவலுடன் சென்னைக்கு கிளம்பினார் விஜய்யை பார்க்க
முதல்முதலாக தனது கனவு நாயகனை நேரில் சந்திக்க இருப்பதால் அவருக்குள் உற்சாகம், பயம், உணர்ச்சிவசம் என இன்னும் என்னென்ன தமிழில் வார்த்தைகள் இருக்கின்றதோ அத்தனையும் அவரது முகத்தில் குடிகொண்டன. அவர் தனது குடும்பத்தினர்களுடன் ஸ்டுடியோவுக்கு நுழைந்தபோது அங்கு விறுவிறுப்பாக படப்பிடிப்பிற்காக வேலைகள் நடந்து கொண்டிருந்தது. அன்றைய தினம் ஒரு பாடலை படமாக்க ஏற்பாடு நடந்தது. விஜய் அந்த சமயத்தில் படப்பிடிப்பில் இருந்ததால் அந்த ரசிகர் தனது குடும்பத்தினர்களுடன் வெளியே காத்திருந்தார். ஒருசில காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்ததும் விஜய் மதிய உணவு இடைவெளிக்காக வெளியே வந்தார். விஜய் தன்னை சந்திக்க அழைக்கப்பட்டார் என்ற தகவல் வந்ததும் அந்த ரசிகருக்கு இதயம் படபடத்தது. கடைசியில் அந்த நிமிடம் அவரது வாழ்க்கையில் நடந்தே விட்டது. ஆம் தனது கனவு நாயகனை அவர் முதன்முதலாக நேரில் பார்த்துவிட்டார்
ஹாய், என்ற புன்சிரிப்புடன் கூடிய வார்த்தை அந்த ரசிகரின் உடலில் ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது. தன்னுடனும் தனது குடும்பத்தினர்களுடன் கைகுலுக்கிய விஜய், பின்னர் அனைவருடனும் தனித்தனியாகவும், மொத்தமாகவும் பொறுமையாக புகைப்படம் எடுத்து கொண்டார்.
போட்டோ எடுக்கும் படலம் முடிந்ததும் அந்த ரசிகர் விஜய்யிடம் சற்று தயங்கி 'உங்களிடம் சில நிமிடங்கள் தனியாக பேச வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்தார். அந்த ரசிகரின் குடும்பத்தினர்களும் விஜய்யின் உதவியாளர்களும் அவரது கோரிக்கையால் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அப்போதும் விஜய்யிடம் அதே புன்னகை. 'சரி' என்றார். உடனே அந்த அறையில் இருந்து அந்த ரசிகரின் குடும்பத்தினர் உள்பட அனைவரும் வெளியேறினர். விஜய்யுடனான அந்த பத்து நிமிட சந்திப்பு இன்று வரையில் அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத, பசுமரத்தாணி போன்று மனதில் பதிந்துள்ளது.
இந்த உரையாடலின்போது திடீரென அந்த ரசிகர் சோபாவில் இருந்து திடீரென கீழே இறங்கினார். இதனை கவனித்த விஜய் 'என்ன ஆச்சு' என்று கேட்க, 'நான் கொஞ்சம் செளகரியாக சோபாவில் உட்கார வேண்டும். அதற்கு வெளியே இருக்கும் என் அம்மாவை உதவிக்கு அழைக்கட்டுமா? என்று கேட்டார். உடனே சிறிதும் யோசிக்காமல் விஜய் எழுந்து அவர் சோபாவில் செளகரியமாக உட்கார உதவி செய்துவிட்டு, 'இப்போது ஓகேவா? என்று கேட்டார். விஜய் நினைத்திருந்தால் அந்த ரசிகரின் அம்மாவையோ அல்லது அவரது உதவியாளரையோ அழைத்து அவருக்கு உதவி செய்ய கூறியிருக்கலாம், ஆனால் அவரே உதவி செய்ததுதான் அவரது எளிமை, உதவி செய்யும் மனப்பான்மைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. சூப்பர் ஸ்டாரின் அந்தஸ்தில் உள்ள ஒருவர் இந்த அளவுக்கு இறங்கி வந்து ஒரு ரசிகருக்கு உதவி செய்வது என்பது நினைத்து கூட பார்க்க முடியாத ஒரு விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் படக்குழுவினர்களிடம் இருந்து அடுத்த ஷாட் ரெடி என்ற குரல் வந்தது. ஆனாலும் அவர்களை 'சற்று பொறுங்கள்' என்று கூறிவிட்டு அந்த ரசிகரிடம் தொடர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார். இறுதியில் விஜய் அந்த ரசிகரிடம் இருந்து விடை பெறும் நேரம் வந்தது. அப்போது அவர்களுக்குள் நடந்த உணர்ச்சிகரமான உரையாடல் இதுதான்
விஜய்: ஓகே. நான் கிளம்பட்டுமா? ஆல் தி பெஸ்ட்
ரசிகர்: வேண்டாம், இன்னும் சில நிமிடங்கள் பேசலாம்
விஜய்; (புன்னகையுடன்) ஆனால் அவங்க என்னை கூப்பிடறாங்க
ரசிகர்: ஓகே அண்ணா
விஜய்: உங்க பேரு என்ன சொன்னிங்க
ரசிகர்: அண்ணாமலை அண்ணா
விஜய்: அண்ணாமலை...ம்..ம்.. என்று கூறிக்கொண்டே அந்த ரசிகரிடம் இருந்து விடை பெற்றார்
ஆனால் அவர் வெறும் அண்ணாமலை அல்ல., கோவையில் எம்பிஏ படித்த பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பு விஜய்யை அவர் முழுமையாக புரிந்து கொள்ள உதவியது. மற்ற ஹீரோக்கள் போல் இல்லை விஜய். அவர் உண்மையிலேயே இனிமையானவர், நட்பானவர், அமைதியானவர், எளிமையானாவர். மொத்தத்தில் யாரும் எதிர்பாராத வகையில் இருக்கும் ஒரு உயர்ந்த மனிதர். அதுதான் விஜய்.