'வாரிசு' படத்தை புரமோஷன் செய்கிறாரா பிரபல அரசியல்வாதி?

தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ’வாரிசு’ படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வைரலான நிலையில் வரும் 24ஆம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாகவும், அதில் விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொள்வார்கல் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் டிசம்பர் 27ஆம் தேதி இப்படத்தின் தெலுங்கு பதிப்பான ’வாரசுடு’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற இருப்பதாகவும் இந்த நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த தயாரிப்பாளர் தில் ராஜூ திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பிரபல தெலுங்கு நடிகர் மற்றும் அரசியல்வாதியும், ஜனசேனா கட்சியின் தலைவரும் பவன் கல்யாண் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. ’வாரசுடு’ திரைப்படம் தெலுங்கு மாநிலங்களில் ரிலீஸ் ஆகும் தினத்தன்று சிரஞ்சீவி மற்றும் என்டிஆர் பாலகிருஷ்ணா ஆகியோர் நடித்த திரைப்படங்களும் வெளியாக இருக்கும் நிலையில் ’வாரசுடு’ திரைப்படத்திற்காக சிரஞ்சீவி குடும்பத்தில் இருந்தே ஒருவர் வந்து புரமோஷன் செய்ய இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.