அரசியல் கட்சியை பதிவு செய்ய விஜய் தரப்பு தீவிர ஆலோசனை? சட்டப்பேரவை தேர்தலில் போட்டியா?

  • IndiaGlitz, [Saturday,August 15 2020]

உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசியல் கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார் என்பது தெரிந்ததே. அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கமல், ரஜினியை அடுத்து விஜய்யும் அரசியலில் குதிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் டெல்லி வழக்கறிஞர் ஒருவரிடம் அரசியல் கட்சி பதிவு செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே அரசியல் கட்சியை தொடங்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவை நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னரே அரசியல் கட்சி தொடங்க விஜய் தரப்பு முடிவு செய்துள்ளதாகவும் அதற்கான வேலைகள் தற்போது நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மத்திய தேர்தல் ஆணையத்தில் புதிதாக அரசியல் கட்சி பதிவு செய்வது குறித்து விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் சமீபத்தில் சென்னையில் தனது அலுவலகத்தில் ஆலோசனை நடத்தியதாகவும் இந்த ஆலோசனையில் டெல்லியை சேர்ந்த அனுபவமுள்ள வழக்கறிஞர் ஒருவர் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த வழக்கறிஞர் தேர்தல் ஆணையத்தின் புதிதாக அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் பணிக்காக ஒரு நிறுவனத்தை நடத்தி வருவதாகவும் ஏற்கனவே பல திரை நட்சத்திரங்களுக்கு இவர்தான் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்து கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த சில வருடங்களாக விஜய்யின் திரைப்படங்களில் அரசியல் வசனங்கள் பொறி பறந்துகொண்டிருக்கும் நிலையில் தற்போது அவர் அரசியலில் விரைவில் ஈடுபடுவார் என்றும் வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவார் என்றும் கூறப்படுவதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விஜய் உண்மையிலேயே அரசியலில் குதிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.